என் மலர்
பைக்

வாகன விற்பனை அமோகம்: கடந்த மாதம் மட்டும் 31.50 லட்சம் இருசக்கர வாகனங்கள் பதிவு
- நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
- ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவம் பதிவான வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 517 ஆட்டோக்கள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 73 ஆயிரத்து 577 டிராக்டர்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 40 லட்சத்து 23 ஆயிரத்து 923 வாகனங்கள் பதிவாகியுள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதம் 18 லட்சத்து 27 ஆயிரத்து 337 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 120.21 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் அதிகம் பதிவாகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 735 ஆக இருந்த இருச்சக்கர வாகனங்களின் பதிவு, அக்டோபர் மாதம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 ஆக எழுச்சியடைந்துள்ளது. இது 144.60 சதவீதம் உயர்வு ஆகும்.
இதேபோல 2 லட்சத்து 99 ஆயிரத்து 369 ஆக இருந்த தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள் 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 ஆகவும், 72 ஆயிரத்து 124 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 ஆகவும் ஏறுமுகம் கண்டிருக்கிறது. பண்டிகை கால 42 நாட்களில், அதாவது செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் 52 லட்சத்து 38 ஆயிரத்து 401 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டு 43 லட்சத்து 25 ஆயிரத்து 632 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு, தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்ததால் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்தது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறும்போது, "ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் வரி குறைப்பு, பண்டிகை காலம் மற்றும் கிராமப்புற மக்களிடம் மறுமலர்ச்சி ஆகியவை ஒரே நேரத்தில் வந்ததால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் அக்டோபர் மாதம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.
வரவிருக்கும் வாகனங்களின் புதிய மாடல்கள், ஆரோக்கியமான நிதி நிலைமை, நிலையான எரிபொருள் விலை ஆகியவை தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கின்றன" என்றார்.






