என் மலர்
ஆட்டோ டிப்ஸ்

இது தான் காரணம், இன்னோவா டீசல் மாடல் முன்பதிவு நிறுத்தியது பற்றி மனம் திறந்த டொயோட்டா
- டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா டீசல் மாடல் முன்பதிவு சமீபத்தில் நிறுத்தப்பட்டது இந்திய சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- தற்போது இந்த முடிவுக்கான காரணம் பற்றி டொயோட்டா நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் டொயோட்டா விற்பனையாளர்கள், இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவை திடீரென நிறுத்துவதாக அறிவித்தன. இதை அடுத்து ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான டொயோட்டா தனது அதிக பிரபலமான எம்பிவி மாடலை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
மேலும் இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு மாற்றாக ஹைப்ரிட் மாடல் ஒன்று இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தியதற்கான காரணம் பற்றி டொயோட்டா நிறுவனம் மௌனம் காத்து வந்தது. இந்த நிலையில், இதற்கான காரணத்தை விளக்கி அறிக்கை ஒன்றை டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, இந்திய சந்தையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும். 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்த கார் நீண்ட பயணத்தை எதிர்கொண்டு வந்துள்ளது. சந்தையில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்ட இன்னோவா இந்த பிரிவில் மற்ற மாடல்களை விட ஒருபடி மேலாகவே இருந்து வந்துள்ளது."
"கடந்த ஆண்டுகளில் இந்த மாடல் பலமுறை அதிகளவு மாற்றங்களை எதிர்கொண்டு இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஆடம்பரம், சவுகரியம் மற்றும் செயல்திறன் என எல்லாவற்றிலும் இந்த கார் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்று வந்துள்ளது. இதே வரிசையில் இரண்டாம் தலைமுறை இன்னோவா க்ரிஸ்டா தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது."
"எனினும், தொடர்ந்து கிடைத்து வரும் அமோக வரவேற்பு காரணமாக இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்டுக்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட் முன்பதிவை நிறுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர் நலன் சார்ந்த நிறுவனமாக தொடர்ந்து வாகன வினியோகத்தை வேகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெறும்." என தெரிவித்துள்ளது.






