தொழில்நுட்பச் செய்திகள்
ஸ்மார்ட்போனை கொண்டு இயங்கும் ஆக்சிஜன் கருவியை உருவாக்கி ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை
கொரோனா 2-வது அலையின்போது பலரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஜி.ஆர்.எஸ் இந்தியா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஸ்மார்ட்போனை கொண்டு இயங்கும் ஆக்சிஜன் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த ஆக்சிஜன் கருவிக்கு ஆக்சிஜன் பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. எளிதாக எடுத்து செல்லக்கூடிய இந்த கருவியை மருத்துவ அவசரநிலையின்போது பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் இந்த ஆக்சிஜன் கருவியை எடுத்து செல்வது எளிமையாக இருக்கும் என கூறப்படுகிறது.
கொரோனா 2-வது அலையின்போது பலரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழந்தனர். ஆக்சிஜனை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பதும் அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆக்சிஜன் கருவி உருவாக்கப்ப்பட்டுள்ளது.
இந்த கருவி ஆக்சிஜனை நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்பேக் போல இருக்கும். இதனை மொபைல் செயலியுடன் இணைத்து கண்காணிக்க முடியும். முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் இந்த ஆக்சிஜன் கருவியை எளிதாக பயன்படுத்தலாம்.
இந்த கருவி காப்புரிமை பெறுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.