தொழில்நுட்பச் செய்திகள்
மிக குறைந்த விலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ள டிஸ்னி பிளஸ்- ஒடிடி பயனர்களுக்கு கொண்டாட்டமான செய்தி
இந்தியாவில் தற்போது மாதம் ரூ.299 திட்டமே குறைந்த விலை ஹாட்ஸ்டார் டிஸ்னி+ திட்டமாக இருக்கிறது.
டிஸ்னி நிறுவனம் தனது டிஸ்னி பிளஸ் ஓடிடி சேவையில் குறைந்த விலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சேவை அமெரிக்காவில் இந்த வருடத்தில் அறிமுகமாகி, பின் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஸ்னி நிறுவனம் கூறியதாவது:-
டிஸ்னி பிளஸ் சேவை பல்வேறு தரப்பட்ட பயனர்களை சென்றடைவதற்காக இந்த விலை குறைந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் மற்ற திட்டங்களை போல அல்லாமல் விளம்பரங்கள் இடம்பெறும். அதனால் வாடிக்கையாளர்கள் குறைந்த விலை கொடுத்தால் போதும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள், ஓடிடி நிகழ்ச்சியை உருவாக்குபவர்கள் மூன்று பேரும் பயனடைவர்.
இவ்வாறு டிஸ்னி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் டிஸ்னி பிளஸ் நிறுவனம் ஹாட் ஸ்டாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு விளம்பரம் இல்லாத குறைந்த விலை திட்டமாக மாதம் ரூ.299 திட்டம் இருக்கிறது. விரைவில் வர இருக்கும் திட்டம் மேலும் குறைந்த விலையில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.