தொழில்நுட்பச் செய்திகள்
பிளிப்கார்ட் செல்பேக் திட்டம்

உங்கள் பழைய ஸ்மார்ட்போனை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா? - பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ள சூப்பர் திட்டம்

Published On 2022-02-15 15:43 IST   |   Update On 2022-02-15 15:48:00 IST
இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் 1700 பின்கோடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களும் அடங்கும்.
பிளிப்கார்ட் நிறுவனம் புதிய 'செல்பேக்' (Sell back) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய  ஸ்மார்ட்போன்களை பிளிப்கார்ட் தளத்தில் நல்ல விலைக்கு விற்க முடியும். முக்கியமாக, பிளிப்கார்ட் தளத்தில் இருந்து வாங்காத போன்களைக் கூட செல்பேக் திட்டத்தின் கீழ் நல்ல விலைக்கு விற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விற்கப்பட்ட பழைய போனின் மதிப்புக்கு நிகரான கேஷ் பேக் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் 1700 பின்கோடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களும் அடங்கும். 

இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன்களை விற்பதற்கு புதிய ஆப்ஷன் பிளிப்கார்ட் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஸ்போனை விற்க விரும்பும் வாடிக்கையாளரிடம் 3 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பின் பிளிப்கார்ட் பணியாளர்கள் 48 மணி நேரத்தில் நேரில் வந்து போனை பெற்றுக்கொள்வர். 

பின் வாடிக்கையாளரின் போன் பரிசோதனை செய்யப்பட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும். அதன்பிறகு மின்னனு கூப்பனின் கேஷ்பேக் தொகை வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.



சமீபத்தில் பழைய மின்னணு பொருட்களை வாங்கி விற்கும் யாந்த்ரா தளத்தை பிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியது. இதை தொடர்ந்து இந்த செல்பேக் திட்டத்தை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது.

பழைய மொபைல்களுக்கு வாடிக்கையாளர் எதிர்பார்ப்பதை விட நல்ல விலை கிடைக்கும் என்றும், இதில் கிடைக்கும் கேஷ் கூப்பனைக் கொண்டு பிளிப்கார்ட்டில் பொருள்கள் வாங்கும் போது கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐ.டி.சி வெளியிட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 12.5 கோடி பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் இருப்பதாகவும், அவற்றில் 2 கோடி மொபைல்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

இதனால் நாட்டில் அதிகரிக்கும் மின்னணுக் கழிவுகளை குறைப்பதற்கு பிளிப்கார்ட் நிறுவனத்தின் செல்பேக் திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News