தொழில்நுட்பச் செய்திகள்
செல்போன்

3 மாதங்களில் செல்போன் கட்டணம் மேலும் உயரும்

Published On 2022-02-10 12:28 IST   |   Update On 2022-02-10 12:28:00 IST
அதிக வரிவிதிப்பு காரணமாக 2021-2022-ம் நிதியாண்டில் 3-ம் காலாண்டில் ஏர்டெல் நிகர லாபத்தில் 2.8 சதவீதம் சரிந்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொலைபேசி துறையில் 5ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குத்துறை ஆணையம் 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி செல்போன் கட்டணம் மேலும் உயருகிறது.

இது குறித்து ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறியதாவது:-

செல்போன் துறையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இந்த ஆண்டு செல்போன் கட்டணம் மேலும் உயரும். 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும்.

ஒரு சந்தாதாரருக்கு தற்போது ரூ.163 என்று இருக்கும் கட்டணம் ரூ.200 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

தற்போது நாட்டில் 3 முதல் 4 சதவீத ஸ்மார்ட்போன்கள் மட்டுமே 5ஜி தொழில்நுட்பம் கொண்டதாக உள்ளது. இது வருகிற மார்ச் மாதத்திற்குள் 10 முதல் 12 சதவீதமாக உயரும். 2023-2024-ம் ஆண்டுகளில் பெரும்பாலானோர் 5ஜி சேவையை பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள்.

அதிக வரிவிதிப்பு காரணமாக 2021-2022-ம் நிதியாண்டில் 3-ம் காலாண்டில் ஏர்டெல் நிகர லாபத்தில் 2.8 சதவீதம் சரிந்துள்ளது. டீசல் விலை அதிகரித்து வருவதாலும் திறன் மேம்பாடு காரணமாகவும் செலவுகள் அதிகரித்து வருகிறது.

எரிசக்தி செலவினங்களை குறைத்தல், செல்போன் டவர் வாடகைகளை மறுபரிசீலனை செய்தல் மூலம் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News