ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு டெவலப்பர்களுக்கு 60 பில்லியன் டாலர்களை கொடுத்ததாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கடந்த ஆண்டு மட்டும் ரூ. 4.43 லட்சம் கோடி கொடுத்தோம் - ஆப்பிள் அதிரடி
பதிவு: ஜனவரி 12, 2022 16:30 IST
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டு டெவலப்பர்களுக்கு 60 பில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,43,300 கோடி கொடுத்ததாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றி ஆப்பிள் வெளியிட்ட தகவல்களில், அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டெவலப்பர்களுக்கு எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் இதுவரை இல்லாத அளவு அதிக தொகையை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் செலவிட்டுள்ளனர் என ஆப்பிள் அறிவித்து இருக்கிறது. எனினும், சரியான தொகை பற்றிய விவரங்களை ஆப்பிள் வெளியிடவில்லை.
2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஆப் ஸ்டோரில் இருந்து டெவலப்பர்களுக்கு 260 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19,21,486 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோட்களை பெற்ற ஆப் பட்டியலை ஆப்பிள் வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் தொகையாக தெரிந்தாலும், இதன் மூலம் எத்தனை டெவலப்பர்கள் பயன்பெற்றனர் என்ற விவரங்களை அறிந்து கொள்ள இயலாது. ஆப் ஸ்டோரில் ஏராளமான போலி செயலிகள் இடம்பெற்று இருப்பதாக டெவலப்பர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.