தொழில்நுட்பம்
இந்தியாவில் 5ஜி வெளியீடு - இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா?
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் பயன்பாட்டிற்கு வர இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் விரைவில் 5ஜி சேவை வழங்கப்பட இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவில்லை. மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசு 5ஜி ஸ்பெக்ட்ரமை விற்பனை செய்யப்போவது இல்லை.
எனினும், சில டெலிகாம் நிறுவனங்கள் தற்சமயம் உள்ள பேண்ட்களிலேயே 5ஜி சேவையை வழங்க முடியும் என தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 28 ஆம் தேதி ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை வெற்றிகரமாக செயல்படுத்தியது.
இந்திய சந்தையில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை நெட்வொர்க் தொழில்நுட்பம் விரைவில் வெளியாகும் என்ற போதும், பெரும்பாலானோர் இதனை பயன்படுத்த சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.
கடந்த மாதம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2021 இரண்டாவது அரையாண்டில் இந்தியாவில் 5ஜி புரட்சி துவங்கும் என அறிவித்து இருந்தார். தற்போதைய தகவல்களில் 5ஜி வெளியீடு விரைவில் நடைபெறலாம் என்ற போதும், இதன் பயன்பாடு துவங்க சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆண்டில் தான் இந்தியாவில் உள்ள 6 சதவீதம் பேர் 5ஜி பயன்படுத்து துவங்குவர் என்றும் 2040 ஆண்டில் இது 93 சதவீதமாக உயரும் என்றும் தெரிவித்து இருக்கிறது.
5ஜி வெளியீட்டிற்கு பாதுகாப்பு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதுதவிர இந்தியாவில் 5ஜி உள்கட்டமைப்புகளில் ஹூவாய் மற்றும் இசட்டிஇ போன்ற நிறுவனங்களின் பங்களிப்பும் 5ஜி தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கும்.