தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசஜ் பயன்பாடு பலமடங்கு சரிந்தது

Published On 2020-04-28 14:19 IST   |   Update On 2020-04-28 14:19:00 IST
வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசேஜ் பயன்பாடு பலமடங்கு சரிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் சூழ்நிலையில், மக்களிடம் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் இருப்பதால், சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் மற்றும் செய்திகள் பரவுவது பலமடங்கு அதிகரித்தது.   

இதனை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில், ஃபார்வேர்டு மெசேஜ் அம்சத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி ஒருவர் ஒரே சமயத்தில் ஒருவருக்கு மட்டுமே குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்ய முடியும். இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசேஜ் பயன்பாடு 70 சதவீதம் வரை குறைந்து இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.



போலி செய்திகள் பரவுவதை தடுக்க கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடு நல்ல பலன் அளித்திருக்கிறது. இந்த மாற்றம் மூலம் வாட்ஸ்அப் செயலியை தனிப்பட்ட உரையாடல்களுக்கானதாக இருக்க உதவுகிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ஃபார்வேர்டு மெசேஜ்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதால், போலி செய்திகள் பரவுவது அடியோடு நின்றுவிட்டதாக கருத முடியாது என்றாலும், இது சரியான பாதைக்கான முதல் அடி என கூற முடியும். 

முன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப்பில் ஒரே சமயத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்யும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏற்கனவே ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News