சென்னையில் ஐபோன் 15 சீரிஸ் உற்பத்தி.. லீக் ஆன சூப்பர் தகவல்..!
- ஐபோன் 15 சீரிசில் மொத்தமாக நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
- ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
இந்தியாவில் புதிய ஐபோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், ஆப்பிள் இன்க் நிறுவனம் ஐபோன் 15 மாடல்களை தமிழ் நாட்டில் உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழும ஆலையில் முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற இருக்கிறது.
தற்போது உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் உள்ள ஆலையில் இருந்து வினியோகம் துவங்கிய பிறகு தான், தமிழகத்தில் இருந்து புதிய யூனிட்கள் அனுப்பப்பட உள்ளன. புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரும் அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யும் போது, அவற்றுக்கான உபகரணங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காக சென்னையில் உள்ள உற்பத்தி ஆலை தயார்நிலையில் உள்ளது. ஐபோன் 15 சீரிசில், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ பிளஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
புதிய ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஏ17 பயோனிக் சிப்செட், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் குறைந்தபட்ச ஸ்டோரேஜ் 256 ஜிபி-யாக உயர்த்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.