மொபைல்ஸ்

ஸ்மார்ட்போன் விற்பனை 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

Published On 2025-11-13 12:31 IST   |   Update On 2025-11-13 12:31:00 IST
  • 3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது.
  • இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும்.

மனிதனின் 6-வது விரல் ஸ்மார்ட்போன் என சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடும் சேவையும் அதிகரித்துள்ளது. தகவல் தொடர்பு, இணைய அணுகல், புகைப்படம் எடுக்கும் வசதி, பண பரிவர்த்தனை, ஏ.ஐ., என பல அம்சங்களை ஒருங்கே பெற்ற தொழில்நுட்ப சாதனமாக ஸ்மார்ட்போன் விளங்குகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இயங்காது என்பதால் ஸ்மார்ட்போன் யுகம் என்ற சொல்பதத்துக்கு பொருத்தமாக அதன் செயல்பாடு உள்ளது. மேலும் செல்போன் ஒரு ஆடம்பர குறியீடாகவும், பெண்களுக்கான பாதுகாப்பு அம்சமாகவும் மாறியுள்ளது.

இத்தகைய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச டேட்டா கார்ப்ரேஷன் (ஐ.டி.சி.) என்னும் பிரபல தரவு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இந்த நிதியாண்டுக்கான 2-ம் காலாண்டில் (ஜூலை-செப்) நாட்டின் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும். ஜி.எஸ்.டி. வரிசீர்திருத்தம், பண்டிகை காலம், வசதியான தவணை வசதி மற்றும் பழைய சாதனங்களை மாற்றும் திட்டங்களால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

அந்த ஆய்வின்படி அடிப்படை நிலை ஸ்மார்ட்போன்களைவிட பிரிமியம் ரகம் என்னும் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படும் போன்களே அதிகளவில் விற்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் விவோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அது 18.3 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. விவோ நிறுவனம் இந்த பட்டியலில் 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து ஒபோ நிறுவனம் 13.9 சதவீதம் சந்தை மதிப்பை பெற்றுள்ளது. சாம்சங் 12.6 சதவீதம் அளவில் சந்தை மதிப்பை பெற்றது. செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்தநிலையில் அந்த நிறுவனம் 50 லட்சம் செல்போன்களை விற்று இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக மோட்டோரோலா நிறுவனம் 52.4 சதவீதம் வருடாந்திர உயர்வை கண்டு பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை சராசரி ரூ.26,079 (294 டாலர்கள்) ஆக இருந்துள்ளது.

Tags:    

Similar News