விஷ்ணு சகஸ்ரநாமமும், ஸ்படிக மணி மாலையும்
- கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை பீஷ்மருக்கு காட்டி அருளினார்.
- ஸ்ரீகிருஷ்ணன் கூறியதை கேட்டதும், பீஷ்மரின் கழுத்தில் இருந்த ஸ்படிக மணி மாலையின் மகிமை, சகாதேவனுக்குப் புரிந்தது.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார்.
பின்னர், பீஷ்மர் மகாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டார். அருகில் இருந்த கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை பீஷ்மருக்கு காட்டி அருளினார். அந்த சமயத்தில் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே 'ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம்' எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பாகும்.
அனைவரையுமே அந்த மந்திரங்கள் கவர்ந்தன என்றபோதிலும், பாண்டவர்களின் கடைசி சகோதரனான சகாதேவனை அவை தீவிரமான பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின. ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவனான அவன், எத்தனையோ சாஸ்திர நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். இருந்தாலும், விஷ்ணு சகஸ்ர நாமத்தின் வரிகள் அவனது மனதில் நிற்கவில்லை. அதற்கு ஸ்ரீகிருஷ்ணன். 'சகாதேவா! பீஷ்மர் மோட்சம் அடைந்து, அவர் உடலுக்கு மரியாதை செய்து முடித்த பின்பு, அவர் கழுத்தில் அணிந்துள்ள ஸ்படிக மணிமாலையை எடுத்து நீ அணிந்துகொள். அந்த மணிகளின் சக்தியால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதுமாக உன் நினைவுக்கு வரும்!''என்றார்.
ஸ்ரீகிருஷ்ணன் கூறியதை கேட்டதும், பீஷ்மரின் கழுத்தில் இருந்த ஸ்படிக மணி மாலையின் மகிமை, சகாதேவனுக்குப் புரிந்தது. பீஷ்மரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீகிருஷ்ணன் கூறியது போன்று, பீஷ்மரின் ஸ்படிக மணிமாலையை அணிந்து, பக்தியோடு நாராயணனைத் தியானித்து, பீஷ்மர் இயற்றிய விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்கள் அனைத்தையும் மீண்டும் உருவாக்கி, ஏடுகளாக்கி உலகுக்கு அளித்தான்.
அதனால்தான் இன்றும் சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்பவர்களும் ஸ்படிக மணிகளை மாலையாக அணிகிறார்கள்.