தீராத வழக்கை தீர்க்கும் வராகி அம்மன் வழிபாடு
- கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும்.
- வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.
நாளை (புதன்கிழமை) பஞ்சமி திதியாகும். நாளை காலை 6.36 மணிக்கு பஞ்சமி திதி நேரம் தொடங்குகிறது. 14-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.24 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த ஆடி மாதம் தேய்பிறையில் வரும் இந்த பஞ்சமி திதிக்கு "ரக்ஷா பஞ்சமி" என்று பெயர். இந்த பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாடு மிக மிக முக்கியமானதாகும்.
பொதுவாகவே பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாட்டுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என்பார்கள். ஆனால் ஆடி மாத தேய்பிறையில் செய்யப்படும் வராகி வழிபாடு இரட்டிப்பு பலன்கள் தரக்கூடியதாகும்.
இந்த ஆடி மாதத்தில் இந்த பலனை நீங்கள் பெற வேண்டுமானால் முதலில் வராகி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...
வராகி என்ற பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் ஏழு பேரில் ஐந்தாவதாக உள்ளவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்).
அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி.
இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும். பொதுவாக மஞ்சள் உடையும், முக்கியமாக கலப்பையும், உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள். ஆக தண்டம் ஏந்தியவள்) கொண்டவள் . பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பார்கள். நெல்லையப்பர் கோவில் வராகி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சை பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.
ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி (அகிலாண்டேஸ்வரி அம்மை) வராகி சொரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.
கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தைய உன்னதமான நிலை.
வராகி வராகரின் சக்தி என்றும், எமனின் சக்தி(நீதி தெய்வம்) என்றும் சொல்லப்படுகிறாள். அதில் வராகி அவதாரத்தோடு சொல்லப்படும் செய்தி வராகியின் தத்துவத்தை உணர்த்தி விடும்.
வராகம் என்றால் என்ன? பன்றி. வராக மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராகிதான். என்ன உதவி தெரியுமா?
பன்றிக்கு இயல்பிலேயே வானை நோக்கும் சக்தி கிடையாது. எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராக அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன் மூக்கின் நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும். ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா. ஆக அந்த உந்துதலுக்கு (உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வராகி. ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.
வராகி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை, உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும். அதாவது குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும். எதிரிகள் குறைவார்கள். ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது. இதனால் தான் வராகிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.
வராகி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு விஷயம், வராகி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வராகி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.
ஆனால் வராகி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், ஸ்ரீ வராகிக்கு உகந்ததாக இரவு நேர வழிபாட்டைச் சொல்வர். எனவே, இருள் கவ்விய மாலை வேளையில், வராகியை தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
வராகிக்கு பூமி கீழ் விளையும் பனங்கிழங்கு, கருணைக்கிழகு போன்ற பலவகைக் கிழங்கு வகைகளை அன்னைக்குப் படைத்துப் பிரசாதமாக வாங்கிச் செல்வது விசேஷம்.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும். நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வராகியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும். நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமையிலும், கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும், குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வராகியை வழிபட வேண்டும்.
பார்வதிதேவியின் போர்ப்படைத்தளபதியாக இவள் விளங்குவதாக சக்தி வழிபாட்டு நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வராகி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராகி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.
நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வராகி தேவி. மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வராகி தேவி.
பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வராகி மாலா போற்றுகின்றது. இத்தகைய சிறப்புடைய வராகிக்கு தமிழகம் முழுவதும் ஆலயங்கள் இருக்கின்றன. நமது சென்னையில் பல ஆலயங்களில் வராகிக்கு சன்னதி இருந்தாலும் தனி ஆலயம் என்று பார்த்தால் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகில் இருக்கும் வராகி அம்மன்தான் அனைவருக்கும் தெரிய வரும். சைதாப்பேட்டை நுழைவு வாயலில் பிரதான சாலை ஓரத்திலேயே இந்த அம்மன் வீற்றிருந்து தன்னை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களை வருந்த விடாமல் பலன்களை கொடுத்து கொண்டு இருக்கிறாள். இந்த வராகியை வராகி வள்ளி என்றும் அழைக்கிறார்கள். சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வராகி அம்மன் ஆலயம் இந்த இடத்தில் உள்ளது.
இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினருக்கும் நம்பிக்கை தெய்வமாக வராகி அம்மன் இருந்து வருகிறார்.
2015-ம் ஆண்டு இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு 3 அடி உயரத்தில் வராகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆலயத்தில் வருடத்திற்கு 3 நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முதல் நவராத்திரி வசந்த நவராத்திரி. அந்த நவராத்திரியின் போது அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். 2-வதாக ஆஷாட நவராத்திரியையொட்டி 10 நாட்கள் விழா நடைபெறும். 10-வது நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அடுத்த நவராத்திரி சாரதா நவராத்திரி. இந்த நவராத்திரியையொட்டி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
மாதத்திற்கு 2 முறை பஞ்சமி வரும். அதில் ஒன்று வளர்பிறை பஞ்சமி, 2-வது தேய்பிறை பஞ்சமி. இந்த 2 பஞ்சமியும் அம்மனுக்கு மிகுந்த விசேஷ நாளாகும். இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் சிறப்பாக நடைபெறும். அம்மனுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதம் 3-வது வாரம் வள்ளி அம்மனுக்கு கூழ் படைத்தல் நடக்கும். வைகுண்ட ஏகாதசிக்கு அன்னாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவது சிறப்பு. வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறுவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயாளிகள் இங்கு வந்து வராகி அம்மனின் அருளால் பூரண குணமாகி செல்கின்றனர். பல ஆண்டுகளாக தீராத வழக்குகள் அம்மனின் அருளால் முடிவுக்கு வந்ததால் பக்தர்கள் பலர் நேரில் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு நன்றி செலுத்தி செல்கின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் இங்கு வந்து வழிபட்டு பதவி உயர்வு மற்றும் பலன்களை பெற்று செல்கின்றனர். மேலும் பல அதிசயங்கள் கோவிலில் நடந்து உள்ளது. பிரார்த்தனை நிறைவேறிய பணக்காரர்கள் பலர் கோவிலில் வந்து சேவை செய்கின்றனர்.
ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் போது கர்ப்பிணி பெண்களை அமர வைத்து பூஜை செய்யப்படுகிறது. அடுத்ததாக குழந்தை இல்லாத பெண்களை அமர வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
வளைகாப்பு நிகழ்ச்சி பூஜையில் அமர்ந்த பெண்கள் பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து உள்ளது. நெல்லை மாவட்ட ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஒருவர் திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியமில்லாமல் மனமுடைந்து இருந்தார். இந்த கோவிலைப் பற்றி கேள்விப்பட்டு அம்மனை தரிசித்து சென்றார்.
கோவிலில் தரிசனம் செய்து சென்ற சில நாட்களிலேயே அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த அற்புதம் நிகழ்ந்து இருக்கிறது. கோவிலில் தினந்தோறும் நடக்கும் அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய வெளிமாநில பக்தர்கள் பலர் விமானத்தில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். பெரும்பாலானோர் மலேசியாவில் இருந்து வருகின்றனர்.
வராகி அம்மனுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கும் தொடர்பு உள்ளது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது போல் வராகி அம்மனும் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவில் மூடப்படும். மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு 9½ மணிக்கு கோவில் மூடப்படும்.