வழிபாடு

நாளை அமாவாசை: புண்ணியம் தரும் குலதெய்வ வழிபாடு

Published On 2025-08-21 12:46 IST   |   Update On 2025-08-21 12:46:00 IST
  • அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும்.
  • உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள்.

முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் 'தில ஹோமம்', எத்தகைய ஆத்மாவையும் சாந்தி அடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு நாளைய அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.

முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு 'பித்ரு தோஷம்' ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை மட்டும் விட்டுச் செல்லக்கூடாது.

அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். ஒவ்வொரு அமாவாசையன்றும், இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

எனவே அமாவாசை தோறும் கட்டாயம் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களுடைய சந்ததியினருக்கும் நல்ல பலன்களை வாரி வழங்கக் கூடியது ஆகும். பித்ரு தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளும், நிம்மதி இன்மையும் ஏற்படும். எனவே தவறாமல் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் உங்கள் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து எளிதாக வீட்டிலேயே கூட பூஜை செய்து வழிபட வேண்டும்.

அமாவாசையில் உணவு எதுவும் உண்ணாமல் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும். வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இரு வேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

குறிப்பாக அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை நாளின் போது அசைவம் உணவு உண்ணும் பொழுது உடம்பில் ஒருவித அசவுகரியம் உண்டாகும். இது அறிவியல் ரீதியாகவும் உண்மை என்பதால் அமாவாசை தினத்தில் அசைவ உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது.

வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அன்றைய நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிக்க வேண்டும். அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கவும், குலதெய்வ அருள் பெறவும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. ஒரு மண்பானையில் அல்லது செம்பு, பித்தளை கலசத்தில் தண்ணீரை வைத்து பூஜை அறையில் வையுங்கள். அதில் குலதெய்வத்தை நினைத்து ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்வது குலதெய்வ வழிபாட்டை நிறைவு செய்கிறது. உங்களால் முடிந்தால் நைவேத்தியம் வைத்து வழிபடவும், அப்படி இல்லை என்றால் சிறிதளவு கற்கண்டு வைத்து வழிபடுங்கள்.

அமாவாசை தினத்தன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது "ஓம் ஸ்ரீம் என்று சொல்லி உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி நமஹ" என்று சொல்லவும். அதாவது குலதெய்வத்தின் பெயர் சுப்பிரமணி என்றால் "ஓம் ஸ்ரீம் சுப்பிரமணி நமஹ" என்று 108 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு குலதெய்வம் என் வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். அன்று நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் சைவ உணவுகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு வாழை இலையை விரித்து அதில் சைவ உணவுகளை படையலாக போட்டு அந்த வாழை இலைக்கும் முன்பாக ஒரு சிறிய கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த கண்ணாடிக்கு சந்தனம் குங்குமம் வைத்து அதை குலதெய்வமாகவும் நம்முடைய முன்னோர்களாகவும் பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு தேங்காய் உடைத்து பழம் வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அந்த கண்ணாடியை பார்த்தவாறு குலதெய்வத்திடம் பேசுவது போல் பேசி வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று பேச வேண்டும்.



பிறகு இந்த படையலில் இருந்து சாதத்தை சிறிதளவு எடுத்து காக்கைக்கு உணவாக வைத்துவிட்டு வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த முறையில் அமாவாசை தினத்தன்று குலதெய்வத்தை நினைத்தும் முன்னோர்களை நினைத்தும் சைவப்படையல் இட்டு வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

குலதெய்வ ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலே வழிபாடு செய்யலாம். அதற்கு மாலை வேலையில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு குலதெய்வ படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள் உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்த நெய்வேத்தியத்தை வைத்து விட்டு நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு உங்கள் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இப்படி பிரார்த்தனை செய்யும் நேரத்தில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி வசி வசி என்ற வார்த்தையும் சேர்த்து சொல்லுங்கள். குலதெய்வமே தெரியாது என்பவர்கள் ஓம் குலதெய்வமே வசி வசி என்ற இந்த மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும். இதை எத்தனை முறை உங்களால் சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.

குலதெய்வம் தெரியாதவர்கள் மேல்மலையனூர் அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்யலாம். ஏனென்றால் அகிலம் பிறக்கும் முன்பு பிறந்த அங்காளம்மனே அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகிறாள் அவளே குலதெய்வங்களுக்கெல்லாம் மூல தெய்வமாக காட்சியளிக்கிறாள்.

இவ்வாறு அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்வதனால் தொட்ட காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும், தடைபட்டு வந்த சுப காரியங்கள் விரைவில் நிறைவேறும், வாழ்வில் நிம்மதி ஏற்படும், குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்பட்டு, தோஷங்கள் நிவர்த்தி ஆகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

குலதெய்வ கோவில்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தவாறு குலதெய்வ வழிபாடு செய்து ஏதேனும் ஒரு ஏழைக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும். இவ்வாறு வழிபட குலதெய்வ கோவில் சென்று வந்த புண்ணியத்தை பெற முடியும்.

Tags:    

Similar News