வழிபாடு

திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர்

Published On 2025-11-28 08:37 IST   |   Update On 2025-11-28 08:37:00 IST
  • பசுவாக சாபம் பெற்ற அம்பிகை, சாபவிமோசனம் வேண்டி பல இடங்களில் அலைந்து திரிந்து ஈசனை வழிபட்டார்.
  • கோவிலில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அழகுடன் காட்சி அளிக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது, உத்வாகநாதர் திருக்கோவில். இத்தல இறைவனின் திருநாமம் உத்வாகநாதர், இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25-வது தலமாகும்.

 

கோவில் தோற்றம்

தல வரலாறு

ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதிதேவி சிவபெருமானை வணங்கிவிட்டு, ``தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்துகொள்ள என் மனம் விரும்புகிறது. என் விருப்பத்தை தாங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று வேண்டினார். இதற்கு பதிலளித்த சிவபெருமான், ``உன் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். அதற்கு சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்" என்று கூறினார். நாட்கள் பல கடந்தன. தன் விருப்பம் எப்போது, எங்கு நிறைவேறும் என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால், தன் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகும் என்ற எண்ணத்தில் பார்வதிதேவி ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதிதேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்கும்படி சாபமிட்டார்.

பசுவாக சாபம் பெற்ற அம்பிகை, சாபவிமோசனம் வேண்டி பல இடங்களில் அலைந்து திரிந்து ஈசனை வழிபட்டார். அவ்வாறு பசுவின் உருவத்தில் உலவி வந்த அம்பிகை, ஒருநாள் ஒரு இடத்தில் இருந்த சிவலிங்க திருமேனியின் மீது பாலை சொரிந்து அபிஷேகம் செய்தார். இதனால் மனம் இரங்கிய சிவபெருமான் பசுவுக்கு முக்தி அளித்தார்.

அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது, தேரழுந்தூர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து பசுக்களை பராமரித்த இடம், கோமல். பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு, ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் திருக்குளம்பம். சிவபெருமான் பசுவுக்கு முக்தி அளித்தது, திருவாடுதுறை.

திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்தினார். அந்த யாகவேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். இதைக் கண்ட பரத மகரிஷி, ``வேள்வியில் தோன்றிய தெய்வீக பெண் யார்'' என்று அதிசயித்து நின்றார். அப்போது தோன்றிய சிவபெருமான், ''வேள்வியில் வந்தவர் உமாதேவியே. அவரை உமது பெண்ணாக ஏற்று, எமக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்'' எனக் கூறி மறைந்தார்.

இதையடுத்து, திருமணத்திற்காக திருவேள்விக்குடியில் கங்கணதாரணமும், மங்கள ஸ்நானமும் செய்யப்பட்டது. குறுமுலைப்பாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்பு உமா தேவியை மணமகளாக அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர்கொண்டு காட்சி அளித்த இடமே, எதிர்கொள்பாடி. அதன்பின்னர், திருமணஞ்சேரியில் சிவபெருமான் உமாதேவியை பூலோக முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை காண தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் என அனைவரும் வந்தனர். இவ்வாறு சிவபெருமானும், பார்வதிதேவியும் கைகோர்த்தப்படி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

 

அம்பிகையுடன் கல்யாணசுந்தரர்

கோவில் அமைப்பு

கோவிலில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அழகுடன் காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி காணப்படுகிறது. கோவிலின் வலதுபுறம் விநாயகர் சன்னிதி உள்ளது. இடதுபுறத்தில் நடராஜர் அருள்பாலிக்கிறார். கருவறையில் இத்தல இறைவன், உத்வாகநாதர் என்ற திருநாமத்துடன் சுயம்புலிங்கமாக அழகுற காட்சி தருகிறார். இவர் 'அருள்வள்ளநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

கருவறையின் முன்மண்டபத்தில் இறைவி கோகிலாம்பாள் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி உள்ளார். இவர் மணக் கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர், அம்பிகையுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

கோவிலில் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, ராகு பகவான், துர்க்கை, விஷ்ணு ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி, கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன.

பிரார்த்தனை

இக்கோவில் நித்திய கல்யாண தலமாகும். இத்தல இறைவனை நாடி வருபவர்களுக்கு, தங்கள் விருப்பம் போல வாழ்க்கை அமையும், திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். கோவிலுக்கு திருமண வரம் வேண்டியும், குழந்தைப் பாக்கியம் வேண்டியும் வரும் பக்தர்கள் கோவில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜைப் பொருட்களை வாங்கி பூஜை செய்கிறார்கள். இத்தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

அமைவிடம்

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி திருத்தலம் அமைந்துள்ளது.

Tags:    

Similar News