தோரணமலை முருகப்பெருமான்
குழந்தை பாக்கியம் அருளும் தோரணமலை முருகன்
- தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
- தைப்பூச திருவிழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் பாதையில் பயணிக்கும்போது சற்று மேற்கு நோக்கி பார்த்தால், வெள்ளைப் பட்டை தீட்டியது போல் ஒரு அழகிய மலைக்குன்று நம் கண்களுக்கு தென்படும். யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் அந்த மலைதான், தோரணமலை. யானைக்கு 'வாரணம்' என்ற பெயர் உண்டு. அந்த வகையில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்ட இந்த மலை, காலப்போக்கில் மருவி, 'தோரணமலை' என்று அழைக்கப் படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தோரணமலையில் உள்ள முருகன் கோவில், பல்வேறு சிறப்புகளை தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.
தல வரலாறு
சிவன் - பார்வதி திருமணத்தின்போது வடக்குப் பகுதி தாழ்ந்து, தெற்குப் பகுதி உயர்ந்தது. அதை சமன் செய்ய சிவபெருமானின் உத்தரவின்பேரில், தென்திசை நோக்கி பயணித்தார், அகத்தியர். இங்குள்ள மலை வளத்தை கண்டு வியந்த அகத்தியர், சித்தர்களுக்கான பாடசாலை ஒன்றை அமைத்தார். அதில் மருத்துவம் உள்பட அனைத்துவிதமான பாடங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அங்கு பயின்ற சித்தர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிறருக்கும் பயிற்றுவித்தனர். அப்போது அவர்கள் வழிபட்ட முருகன்தான், தற்போது தோரண மலையில் குடிகொண்டு அருள்புரிகிறார்.
அகத்தியர் இந்த மலையில் இருக்கும்போது, காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி ஏற்பட, குணம்பெற வேண்டி அகத்தியரிடம் வந்தார். அகத்தியர், மன்னனின் நாடி பார்த்தபோது, மன்னனின் தலையில் தேரை இருப்பது தெரியவந்தது. மன்னன் குளிக்கும்போது தவளையின் குஞ்சு நாசி வழியே தலைக்குச் சென்று வளர்ந்துள்ளதாக அகத்தியர் விளக்கினார். இதையடுத்து கபால அறுவை சிகிச்சை மேற்கொண்ட அகத்தியர், தலைக்குள் இருந்த தேரையை எப்படி வெளியே எடுப்பது என்று சிந்தித்தார்.
அப்போது, அவரது சீடராக இருந்த வாய்பேச முடியாத ராமதேவன் என்ற சிறுவன், ஒரு கலசத்தில் தண்ணீரை வைத்து அலம்பினான். தண்ணீர் சத்தத்தை கேட்ட தேரை துள்ளிக் குதித்து வெளியே வந்தது. இதனால் அந்த சிறுவனுக்கு 'தேரையர்' என பெயர் சூட்டி, அவனை தோரணமலையில் தங்கி இருந்து மருத்துவ சேவை செய்யும்படி பணித்தார், அகத்தியர். அதன்படி தேரையர் இங்கேயே தங்கி இறுதியில் முக்தியும் அடைந்தார். காலப்போக்கில் இங்கு வழிபாடு நின்றதோடு, முருகன் சிலையும் காணாமல் போனது.
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், ஆதிநாராயணன் என்பவரின் மூதாதையர் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், தான் தோரணமலையில் இருப்பதாகவும், அங்குள்ள சுனையில் மறைந்து இருக்கும் தன்னுடைய சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி சுனையில் மறைந்து இருந்த முருகன் சிலையை மீட்டு, குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார்.
இதுபற்றி கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் கூறும்போது, "எங்கள் மூதாதையர் வழியில் நாங்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறோம். எனது தந்தை ஆதிநாராயணன், பள்ளி ஆசிரியராக இருந்தபடியே மீதி நேரங்களில் இந்த மலையில் முருகனுக்கு தொண்டு செய்துவந்தார். கடையம் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டுமே தெரிந்த தோரணமலை ஆலயத்தை, சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஊர் மக்களும் அறியும்படி செய்ய நினைத்தார்.
அந்த காலத்தில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே, அவர் தான் வைத்திருந்த சைக்கிளில் ஒவ்வொரு சினிமா தியேட்டராக சென்று, தோரணமலை பற்றிய பட காட்சியை தியேட்டரில் போடும்படி கேட்பார். இறைப் பணி என்பதால், அவர்களும் மனமகிழ்ச்சியோடு பணம் ஏதும் பெறாமல், படத்தின் இடைவேளையின்போது தோரணமலையை காட்டினார்கள். இப்படிதான் பல்வேறு மாவட்டங்களுக்கும் தோரணமலையின் புகழ் பரவியது.
கிரிவலம் செல்லும் பக்தர்கள்
மேலும், வைகாசி விசாகத்தை சிறப்பாக கொண்டாட எண்ணிய ஆதிநாராயணன், சிறப்பு பூஜையோடு நின்றுவிடாமல் விடிய விடிய பக்தர்களை அங்கேயே இருக்கவைக்க யோசித்தார். அதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் உதவியோடு கலையரங்கம் கட்டி, அதில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தார். இதனால் வைகாசி விசாகத் திருவிழா மக்கள் வெள்ளத்தில் களை கட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக தோரணமலையின் புகழ் பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
இதனால் பலரிடம் உதவி கேட்டு, அவர்களே திருப்பணி செய்தனர். அப்படிதான் மலைமீது ஏற படிக்கட்டுகள், மலை அடிவாரத்தில் தார் சாலை, கிணறு, தங்குவதற்கு தாழ்வாரங்கள், அகன்ற மலைப்பாதை, ஆங்காங்கே இளைப்பாற ஆறு மண்டபங்களும் அமைக்கப்பட்டன. தந்தையின் வழியில் நானும் ஆன்மிகப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். தற்போது தோரணமலை ஆலயத்தில் தினமும் மதியம் அன்னதானம், ஞாயிறு மற்றும் கடைசி வெள்ளிக்கிழமை, பவுர்ணமி கிரிவல நாட்களில் காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
தோரணமலை முருகனின் பக்தர்களால், பல மாணவர்கள் தத்தெடுக்கப்பட்டு படிக்க வைக்கப்படுகிறார்கள். தோரணமலையில் நூலகம் ஒன்றும் உள்ளது. அதில் ஆன்மிகம் மட்டுமின்றி பொதுஅறிவு புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தோரணமலை பக்தர்கள் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது" என்றார்.
தோரணமலையின் தோற்றம்
தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பத்ரகாளி அம்மன் தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மலையில் முருகப்பெருமானின் பாதச்சுவடு உள்ளது. அதை பக்தர்கள் தொட்டு வணங்கி செல்கின்றனர். மலை அடிவாரத்தில் கன்னிமார்கள் சன்னிதி உள்ளது. மேலும் சிவபெருமான், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் சுதை சிற்பங்களும் காணப்படுகின்றன. மலையேறும் இடத்தில் பாலமுருகன் சிலை உள்ளது. மலையேற முடியாதவர்கள் இந்த முருகனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
இங்குள்ள விநாயகர், 'வல்லப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். அவர் தேவியுடன் காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. முகூர்த்த நாட்களில் இவரது சன்னிதியில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. தோரணமலை முருகனை வேண்டுபவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி, உடல் ஆரோக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, விவசாயம் செழிக்க 'வருண கலச பூஜை' நடத்தப்படுகிறது. தைப் பூச திருவிழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் விருட்சபூஜை நடைபெறுகிறது. இதுதவிர, சுனை நீர், கோவில் வளாகத்தில் நடப்பட்டுள்ள 27 நட்சத்திரத்திற்குரிய செடிகள் ஆகியவற்றிற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். முருகன் கோவில் அமைந்திருக்கும் தோரணை மலையைச் சுற்றி தற்போது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் நிகழ்வும் நடக்கிறது. தற்போது கரடுமுரடாக இருக்கும் 6 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையை, புனரமைக்கும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
தோரணமலையை அலங்கரிக்கும் சுனைகள்
தோரணமலையில் மொத்தம் அறுபத்து நான்கு சுனைகள் இருப்பதாக இங்கே தங்கி பாடசாலை நடத்திய சித்தர்களின் பாடல் வாயிலாக அறிகிறோம். அவற்றில் சில மட்டுமே நம் கண்ணுக்கு புலப்படுகின்றன. மலை அடிவாரத்தில் இரண்டு சுனைகள், மலைக்கு போகும் வழியில் இடதுபுறம் 'லட்சுமி தீர்த்தம்' என்ற சுனை, மலையில் முருகப்பெருமானுக்கு இடதுபுறம் சற்று மேலே ஒரு பெரிய சுனை போன்றவை முக்கியமான சுனைகளாக இருக்கின்றன.