வழிபாடு

சாமவேதீஸ்வரர் - உலகநாயகி

தோஷங்களை நீக்கும் சாமவேதீஸ்வரர்

Published On 2025-11-14 13:00 IST   |   Update On 2025-11-14 13:00:00 IST
  • கோவிலின் வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் அழகுடன் காணப்படுகிறது.
  • கிழக்கு பிரகாரத்தில் பைரவர், கால பைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகே திருமங்கலம் எனும் அமைந்துள்ளது, சாமவேதீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனின் திருநாமம் சாமவேதீஸ்வரர், இறைவியின் திருநாமம் உலகநாயகி என்பதாகும்.

தல வரலாறு

தன் தாயை கொன்றதால் பரசுராமருக்கு மாத்ருஹத்தி எனும் தோஷம் ஏற்பட்டது. இதனால் பரசுராமர் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. இதன் காரணமாக இங்குள்ள தீர்த்தம் 'பரசுராம தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஊருக்கு 'பரசுராமேஸ்வரம்' என்ற பெயரும் உள்ளது.

சண்டிகேஸ்வரருக்கு, தனது தந்தையை கொன்றதால் பித்ருஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க சண்டிகேஸ்வரர் பல ஆலயங்களுக்கு சென்று வழிபட்டார். ஆனால் எங்கு சென்றும் அவரது தோஷம் நீங்கவில்லை. இதையடுத்து இத்தலத்துக்கு வந்து, இறைவனின் சன்னிதிக்கு இடதுபுறம் இருந்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். இத்தலத்தில் அர்த்தமண்டபத்தின் நுழைவுவாசலில் சண்டிகேஸ்வரரின் திருமேனி காணப்படுகிறது. இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாகும்.

கோவில் அமைப்பு

கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் அழகுடன் காணப்படுகிறது. ராஜகோபுரத்தை கடந்ததும், தனி மண்டபத்தில் கொடி மர விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்ததாக, கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன.

கருவறையில் இறைவன் சாமவேதீஸ்வரர் லிங்க திருமேனியில் காட்சி தருகிறார். இறைவனின் தேவகோட்டத்தின் தென் திசையில் பிச்சாடனார், தட்சிணாமூர்த்தி, உதங்க முனிவர் ஆகியோர் உள்ளனர். வடதிசையில் பிரம்மாவும், விஷ்ணு துர்க்கையும் காணப்படுகின்றனர். உலக நாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இறைவியின் நுழைவுவாசலில் துவாரபாலகிகளின் சுதை சிற்பங்கள் அழகாக காணப்படுகிறது.

 

வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான்

கோவிலின் கிழக்கு பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். வள்ளிதேவியை மணந்த பிறகு முருகன் இத்தலத்தில் எழுந்தருளியதாக கூறப்படுகிறது. பொதுவாக முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் முருகப்பெருமான் தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்க, வள்ளிதேவி மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள முருகன் 12 கரங்களுடன் இல்லாமல் ஆறுமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

கோவிலின் தெற்கு பிரகாரத்தில் பரசுராமர் பூஜை செய்த லிங்கம் உள்ளது. வடக்கு பிரகாரத்தில் அப்பர், சம்பந்தர், ஆனாய நாயனார், பாணலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், கால பைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வட கிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன.

வழிபாடு

பொதுவாக கோவில்களில் சனி பகவானின் வாகனமான காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு சனி பகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். சனிப்பெயர்ச்சியின்போது இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும். அர்த்தஜாம பூஜையின்போது பைரவரின் பாதத்தில் வைக்கப்படும் விபூதியை பூசினால் சகலவிதமான பில்லி, சூனியம், நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மகம் நட்சத்திரம் அன்றும், சனிக்கிழமை அன்றும் இக்கோவிலில் 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச்சுளையை தானம் செய்தால் நீண்ட ஆயுளை பெறலாம் என்கிறார்கள்.

அமைவிடம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலம் கிராமத்தில் சாம வேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

Tags:    

Similar News