வழிபாடு

மார்கழி மாதமும் அதன் சிறப்புகளும்

Published On 2025-12-11 11:02 IST   |   Update On 2025-12-11 11:02:00 IST
  • அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலமிட வேண்டும்.
  • மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கே உரிய மாதம்.

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

மார்கழி மாதத்தில் சூரிய பகவான், குரு பகவானின் வீட்டில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்கள் கண் விழிக்கும் அதிகாலை பொழுதாக சொல்லப்படுகிறது. அதாவது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம் ஆகும். அவர்கள் கண் விழிக்கும் சமயத்தில், நாம் இறை வழிபாட்டில் ஈடுபட்டு, என்ன வேண்டிக் கொண்டாலும் அதை அப்படியே அவர்கள் அருள்வார்கள்.

அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலமிட வேண்டும் என்றும், ஆண்கள் பஜனைக்கு செல்ல வேண்டும் என்றும் சொல்லி வைத்தார்கள்.

மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, குளித்து விட்டு இறை நாமங்களை ஒரு முறை சொன்னால் கூட, மற்ற நேரங்களில் ஒரு கோடி முறை நாம ஜபம் செய்ததற்கு சமம்.

ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் கோவில்களுக்கு போக முடியாதவர்கள் மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுவதும் கோவிலுக்கு சென்ற பலன்கள் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படுகிறது. அவற்றில் மிக உயர்வானதாக சொல்லப்படுவது மார்கழி மாதம். இது இறை வழிபாட்டிற்கே உரிய மாதம் ஆகும். அதனால் தான் அர்ஜூனனுக்கு செய்த கீதை உபதேசத்தில், மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ண பகவான் விரும்பி சொல்லி உள்ளார்.

Tags:    

Similar News