வழிபாடு
null

Mahalaya amavasai- பித்ரு பூஜைக்குரிய இடங்கள்

Published On 2025-09-16 10:29 IST   |   Update On 2025-09-16 10:33:00 IST
  • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய குளக்கரை
  • வேதாரண்யம் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், மணிகர்ணிகா கங்கை உட்கிணறாக உள்ளது.

பிதுர்பூஜை மேற்கொள்வதற்கு தமிழகத்தில் பல இடங்கள் உள்ளன. கடற்கரையோரங்களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடலும் கூடும் கன்னியாகுமரி கடற்கரை, பூம்புகார், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோடியக்கரை ஆகியவை சிறந்தது என்பர். அதேபோல் காவேரிக் கரையோரத் திருத்தலங்களுக்கு அருகில் உள்ள நதிக்கரையும் போற்றப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தென் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித் துறை, திருப்பராய்த்துறை, திரிவேணிசங்கமம், திருச்சி ஜீயர்புரத்திற்கு அருகிலுள்ள முக்கொம்பு, திருவையாறு புஷ்யபடித்துறை, மயிலாடுதுறை நந்திக்கட்டம், கும்பகோணம் அருகிலுள்ள அரிசலாறு படித்துறை போன்ற நதிக்கரைகள் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன. குடந்தை மகாமகக் குளம், சக்கரத் தீர்த்தம் ஆகியவையும் சிறந்தவையாகும்.

புனிதத் தலமான காசியில், கங்கை நதி ஓடிவரும் வழியில்உள்ள மணிகர்ணிகா புட்கரணியும் தலைசிறந்து விளங்குகிறது. மணிகர்ணிகா என்ற இடத்தில் செய்யப்படும் பிதுர்பூஜை பதினாறு தலைமுறைக்கு பித்ரு சாபங்களை நீக்கக்கூடியது.

காசியில்உள்ள மணிகர்ணிகா நீர்நிலைக்குச் செல்ல வசதியில்லாதவர்களுக்கு, தமிழகத்தில் அதற்கு சமமாகக் கருதப்படும் மணிகர்ணிகா கட்டங்கள் உள்ளன. அங்கு முன்னோர்களுக்கான பிதுர்பூஜை செய்யலாம்.

வேதாரண்யம் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், மணிகர்ணிகா கங்கை உட்கிணறாக உள்ளது. ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டு அருள்புரியும் சென்னை திருநீர்மலைக்கு அருகில் மணிகர்ணிகா புட்கரணி தீர்த்தம் உள்ளது. மேலும் திருவெள்ளறை திருத்தலத்தின் புனிதத் தீர்த்தங்களில் ஒன்று மணிகர்ணிகா தீர்த்தம். இந்த இடங்களிலும் பிதுர்பூஜை செய்வதால் நல்ல பலன்கள் கிட்டும்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலயத் திருக்குளம், கும்பகோணம் நன்னிலம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள திலதைப்பதியில் உள்ள புனித தீர்த்தம், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய குளக்கரை, ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்தகங்கை குளக்கரை, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில், சந்திர தீர்த்தம் அருகே உள்ள ஆலமரத்தடி ருத்ரபாதம், சேலம் சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின்பகுதியில்உள்ள தீர்த்தக்கட்டம் உள்ளிட்ட பல இடங்களும் சிறப்பு வாய்ந்தன.

புனிதத் தலங்களுக்குச் செல்ல முடியாத வயதானவர்கள், தங்கள் இல்லத்திலேயே வேதவிற்பன்னரை அழைத்து பிதுர்பூஜை செய்யச் சொல்லி பயன்பெறலாம்.

Tags:    

Similar News