வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த காட்சி.

திருப்பதி கோவிலில் இன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு

Published On 2025-10-02 10:29 IST   |   Update On 2025-10-02 10:29:00 IST
  • வேத மந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
  • திருப்பதியில் நேற்று 72,247 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் ஏழுமலையான் தினமும் காலை, இரவு என 2 வேலையும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட வாகன சேவை கடந்த மாதம் 26-ந்தேதி நடந்தது. தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ரத உற்சவத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு தங்க குதிரை வாகன சேவை நடந்தது.

பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று காலை மேள வாத்தியங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் கோவில் அருகே உள்ள புஷ்கரணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். வேத மந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.

திருப்பதியில் நேற்று 72,247 பேர் தரிசனம் செய்தனர். 26,738 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 2.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News