பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் ஆடிப்பெருக்கு
- ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும்.
- காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும்.
'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்றொரு பழமொழி உண்டு. இது வெறும் பழமொழி அல்ல. நீரின்றி அமையாது உலகு என்பதுதானே உண்மை. அதேபோல், நம் வாழ்வில், எல்லா சடங்கு சாங்கிய நிகழ்வுகளின் போதும் தண்ணீருக்கும் நமக்குமான பந்தம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அப்படியொரு உணர்வுபூர்வமான நன்னாள்தான் ஆடிப்பெருக்கு விழா!
ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும். கோடைக் காலம் முடிந்து, அந்த வெயிலில் மண்ணெல்லாம் பாளம் பாளமாக வெடித்து, ஆடிக் காற்றில் அந்த மண்ணுக்குள் காற்று நிரம்பியிருக்க, ஆடி மாதத்தில் சாகுபடிக்கு பூமியே தயாராக இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல, காவிரி முதலான நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் அதன் பின்னர், சீரும் சிறப்புமாக செழிக்கும். தானியம் பெருகும்.
முக்கியமாக, ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும். நீறை வணங்க வேண்டும். தாம்பத்ய வாழ்வு சிறக்கும். இந்த நாளில், வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீர்நிலைகளில் நீராடுவார்கள் வணங்குவார்கள்.
வீட்டிலிருந்தபடியே காவிரித்தாயை வணங்குவோம். காலையில் புதிதாகத் திருமணமான பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றிக் கொள்ளும் வைபவமும் இந்தநாளில்தான் நடைபெறும்.
எனவே, அதிகாலையில் நீராடுங்கள். மனதில் காவிரியை நினைத்துக்கொண்டு நீராடினால், அந்த காவிரியானது நம் வீட்டில் தண்ணீரில் கலந்து விடுவதாகவும் ஐதீகம்.
புதிய மஞ்சள் சரடுடன் புதிய தாலியை பெண்கள் அணிந்து கொள்ளுங்கள், கன்னிப் பெண்களுக்கும் வேண்டிக்கொண்டு, புதிய மஞ்சள் அணிவிப்பதும் வழக்கம். இதனால் காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதீகம்.
தம்பதிக்குள் பிரிவினை ஏற்பட்டாலும், கருத்து வேறுபாடுகளை களைந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே புதுமணத் தம்பதியை அந்த ஒருமாதத்தில் பிரித்து வைப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக திருணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது பெண்ணை, இந்த மாதத்தில் பெண்ணை பெற் தாயார் சீர் செய்து தன் வீட்டுக்கு அதாவது பெண்ணின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வருவார்.
ஆடி மாதமான இந்த மாதத்தில் தன் தாய் வீட்டில் இருக்கும் பெண், அனைத்து சாஸ்திர - சம்பிரதாயங்களையும் கற்றறிவாள். சடங்கு சாங்கியத்தை எப்படி மேற்கொள்வது, எல்லோரையும் அனுசரித்து குடும்பம் நடத்துவது எப்படி என்பதையெல்லாம் அறிவாள். அதன்படி புகுந்த வீட்டில் பெயரெடுத்து வாழ்வாள். பெருமைபட வாழ்வாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.