திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு 2 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம்
- இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
- ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படுகின்றன. அதன் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நடைமுறையைப்போல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசலை திறந்து வைக்க, கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசு முடிவு செய்தது. அப்போது பல பீடாதிபதிகள், மடாதிபதிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து கடிதங்களை அளித்தனர். அதன்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறையை தொடர்ந்தனர்.
ஆனால், இது ஆகம சாஸ்திரபடி விரோதமானது என்றும், 10 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம் நடப்பதால், டோக்கன்களுக்காக பக்தர்கள் ஒரே நேரத்தில் திரளுவதால் தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்படுவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் தரிசனத்தை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம நிபுணர்கள் ஆகியோருடன் இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் சொர்க்கவாசல் தரிசனம் குறித்த இறுதி முடிவு வெளியாகும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.