Recap 2023

2023 ரீவைண்ட்- துருக்கியில் 60 ஆயிரம் உயிர்களை காவு வாங்கிய அதிபயங்கர நிலநடுக்கம்

Published On 2023-12-25 14:58 GMT   |   Update On 2023-12-25 14:58 GMT
  • ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
  • பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

துருக்கியில் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி அன்று அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.

துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. 

இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியாவிலும் எதிரொலித்தது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்பு குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். 

இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.

நிலநடுக்கத்தால், சுமார் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2023-ம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், அதி பயங்கர சம்பவமாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கருதப்படுகிறது.

Tags:    

Similar News