புதுச்சேரி

காமராஜர் மணிமண்டபத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் நேரலையை காணும் அமைச்சர் நமச்சிவாயம்.

நிலவில் கால்பதித்த சந்திராயன் புதுவையில் கிராமங்கள் தோறும் கொண்டாட்டம்

Published On 2023-08-24 08:29 GMT   |   Update On 2023-08-24 08:29 GMT
  • பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய இளைஞர்கள்
  • சந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்கியபோது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி:

நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

மனிதர்களால் ஆராயப்படாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

நிலவியல் லேண்டர் இறங்கும் நிகழ்வு அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் காந்தி திடலில் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணக்குமார், செய்தி விளம்பத்துறை இயக்குனர் தமிழ்செல்வன் உட்பட பொதுமக்கள் பலர் கண்டுகளித்தனர். சந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்கியபோது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்தனர்.

புதுவை கல்விதுறை சார்பில் காமராஜர் மணிமண்டபத்தில் சந்திராயன் நிலவில் இறங்கும் நேரலை ஒளிபரப்பபட்டது. இதனை பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பார்த்தார். நிலவில் சந்திராயன் கால் பதித்த போது அங்கிருந்த மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பாண்டிமெரீனாவிலும் எல்.இ.டி. திரையில் நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அங்கு மூவர்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் நிகழ்வை கண்டு -கைதட்டி ஆரவாரம் செய்தனர். தேசியக் கொடியை ஏந்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

இதேபோல் புதுவை நகர பகுதி மட்டுமல்லாது கிராமங்கள் தோறும் பல்வேறு இளைஞர், சமூக அமைப்புகள் சார்பில் நிலவில் சந்திரயான் இறங்கிய நிகழ்வு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கிராம சாலைகளில் தேசிய கொடியுடன் இளைஞர்கள் உலா வந்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News