புதுச்சேரி

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

Published On 2023-07-03 15:01 IST   |   Update On 2023-07-03 15:01:00 IST
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நின்று சென்ற தேர்

புதுச்சேரி:

புதுவை வில்லியனூரில் பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜா பெருமாள் கோவில் உள்ளது.

கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து தினந்தோறும் பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். முக்கிய நிகழ்வான தேர்திருவிழா இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தார். தொடர்ந்து பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்கட்சிதலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வில்லியனூர் நான்கு மாட வீதிகளின் வழியாக சென்ற திருத்தேர் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் வீதியுலா வரும் போது வடக்கு வீதி வந்த போது அங்குள்ள தனியார் பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்து மாணவர்களால் பாடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வாழ்த்து முடியும் வரை தேர் நின்று சென்றது.

Tags:    

Similar News