கோப்பு படம்.
பைக் தகராறில் இரு தரப்பினர் மோதல்
- புதுவை சண்முகாபுரம் நேத்தாஜி வீதியில் வசித்து வருபவர் பாபு.
- பாபு தனது பழுதான மொபட்டை நிறுத்தியிருந்தார்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் பிரியதர்ஷினி நகர் நேத்தாஜி வீதியில் வசித்து வருபவர் பாபு. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சண்முகாபுரம் வி.பி.சிங் நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.
அப்போது அந்த வீட்டின் எதிரே உள்ள காலி மனையில் பாபு தனது பழுதான மொபட்டை நிறுத்தியிருந்தார். ஆனால் வீட்டை காலி செய்த பின்னரும் அந்த மொபட்டை எடுத்து செல்லவில்லை. இதையடுத்து கிருஷ்ணகுமார் அந்த மொபட்டை எடுத்து செல்லும்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாபுவிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பாபு மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மொபட் நிறுத்தியிருந்த இடத்துக்கு சென்ற போது அங்கு மொபட்டை கிருஷ்ணகுமார் கீழே தள்ளிவிட்டதை கண்டனர். இதனை பாபு தட்டிக்கேட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் மேட்டுப்பாளையம் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.