அமைச்சர் சந்தரபிரியங்கா விடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
தனியார் பஸ்களின் பயண நேரத்தை நீட்டிக்க வேண்டும் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை
- விபத்துகளை கட்டுப்படுத்த புதுவையில் இயங்கும் தனியார் பஸ்
- பயண நேரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
புதுச்சேரி:
விபத்துகளை கட்டுப்படுத்த புதுவையில் இயங்கும் தனியார் பஸ்களின் வேகத்தை குறைத்து பயண நேரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா விடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இந்த விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளும் உடல் ஊனமடைதல் நடக்கிறது. வாகன விபத்துகளுக்கு பொதுவாக சாலை விரிவாக்கப்படவில்லை, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக தனியார் பஸ்களின் அஜாக்கிரதை மற்றும் அதிவேகம் காரணமாக பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக புதுவை- கடலூர் சாலையும், புதுவை-விழுப்புரம் சாலையும் மரண சாலையாகவே மாறி வருகின்றது.
ஆனால் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலாலும் முன் செல்லும் மற்றும் பின்வரும் பஸ்களுக்கு இடையே அடிக்கடி நேரம் தொடர்பாக பிரச்சனைகள் வருகின்றது. இதனால் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் பிரச்சனை பெரிதாகி சிக்கலை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இன்றைய கால சூழலுக்கு ஏற்ப போக்குவரத்து எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து புதுவையில் இயங்கும் அனைத்து வழித்தடங்களில் செல்லும் பஸ்களின் வேகத்தை குறைத்து பயண நேரத்தை நீட்டித்து உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இதனை தனியார் பஸ்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை கண்காணிக்க சிறப்பு போக்குவரத்துக் குழுவை அமைக்க வேண்டும்.
இதனை மீறும் தனியார் பஸ்களின் வழித்தட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். எனவே உயிர் பலிகளை குறைக்க போக்குவரத்து துறை அமைச்சர் இதற்காக தனி கவனம் செலுத்தி சிறப்பு குழுவை ஏற்படுத்தி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.