உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

உடுமலையில் பழங்கள் விற்பனை அதிகரிப்பு

Published On 2023-08-22 09:48 GMT   |   Update On 2023-08-22 10:02 GMT
  • ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் மற்றும் கொய்யா, வாழை, சப்போட்டா போன்றவை உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
  • பொதுமக்களின் தேவை அறிந்து சில்லறை வியாபாரிகள் சரக்கு வாகனத்தின் மூலமாக வீதி வீதியாக பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

உடுமலை:

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதில் காய்கறிகள், கீரைகள்,தானியங்களுக்கு அடுத்த படியாக பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள்,ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை, திராட்சை, பிளம்ஸ், சீதாப்பழம், கொய்யா,சாத்துக்குடி, முலாம்பழம், ரம்பூட்டான் உள்ளிட்ட ஒவ்வொரு பழங்களும் மருத்துவ குணங்களை கொண்டு உள்ளது.

குறிப்பிட்ட இடைவெளியில் அதை உணவாக எடுத்துக் கொண்டு வரும் போது உடலும் உள்ளமும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் மற்றும் கொய்யா, வாழை, சப்போட்டா போன்றவை உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.

மற்ற பழங்கள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவை மொத்தமாகவும் சில்லரையாகவும் நடைபாதை வியாபாரிகள் மூலமாகவும் பழங்கள் பொதுமக்களை சென்றடைகின்றது. நகரப்பகுதிகளில் தள்ளுவண்டியில் கூட பழங்கள் விற்பனை செய்வதை காணலாம். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் வெப்பத்தின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். அதைத் தொடர்ந்து வெப்பத்தால் ஏற்படுகின்ற உடல் சூட்டை தணித்து நீர் இழப்பை தடுப்பதற்காக பழச்சாறுகளையும் பழங்களையும் பொதுமக்கள் உணவாக எடுத்து கொண்டு வருகின்றனர்.

இதனால் உடுமலையில் உள்ள பழக்கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் பழங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. கூடவே அதன் விலையும் கணிசமான அளவில் உயர்ந்து உள்ளது. பொதுமக்களின் தேவை அறிந்து சில்லறை வியாபாரிகள் சரக்கு வாகனத்தின் மூலமாக வீதி வீதியாக பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பிரதான சாலையின் ஓரங்கள் முக்கிய சந்திப்புகளிலும் புதிதாக பழக்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொதுமக்களும் உற்சாகத்தோடு பழங்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News