கோப்பு படம்.
மனைபட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
- கூட்டத்தில் தொகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெறுவதற்கு ஆலோசனை செய்தனர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ, மாநில துணை தலைவர் அனந்தராமன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுரேஷ், எழில்ராஜா, சேகர், பெஸ்ட் முருகன், வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தொகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெறுவதற்கு ஆலோசனை செய்தனர்.
பின்னர் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. அதில், அபிஷேக பாக்கத்தில் இலவச மனை பட்டா அரசு உடனடியாக வழங்க வேண்டும். டி.என். பாளையத்தில் இலவச மனைபட்டா வழங்கியவர்களுக்கு அதை பயன்படுத்தி வீடு கட்டிக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணவெளி தொகுதியில் உள்ள பல சாலைகள் சேதமடைந்தும் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் புதிய மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது. சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தொகுதி முக்கிய நிர்வாகிகளான ஜெயராமன், ராஜேந்திரன், தண்டபாணி, பாபு, பாலச்சந்தர், கலியபெருமாள், குமார், ஜெயலட்சுமி உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.