புதுச்சேரி

கோப்பு படம்.

நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது

Published On 2023-06-25 07:58 GMT   |   Update On 2023-06-25 07:58 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை
  • இப்பழக்க வழக்கங்களால் ஏற்படுகின்ற விளைவு என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி  நடந்தது.

ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புதுவையில் இப்போது போதை பொருட்களுக்கு இளம் வயது பிள்ளைகள் அடிமையாகி வருகின்றனர். அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் தங்களது வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர். படிக்க வேண்டிய இளம் வயதில் தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி வருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

தீய பழக்கவழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். எத்தனை கட்டுப்பாடுகளை நாங்கள் கொண்டு வந்தாலும், இதுபோன்ற விழிப்புணர்வு மிகவும் முக்கியம். இப்பழக்க வழக்கங்களால் ஏற்படுகின்ற விளைவு என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் அறிந்து கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதற்குரிய நிலையில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் உடல்நலம் கெடுவதோடு, போதை பொருட்களுக்கு அடிமையான பிள்ளைகள் செய்கின்ற குற்றங்களானது, அவர்களே தங்களை அறிந்து கொள்ளாத நிலையில செய்வதை சில நேரங்களில் உணர முடிகிறது.

போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற உணர்வு என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது. அந்த நிலையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் இருப்பதாக மற்றவர்கள் கூறுவது மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மையாகும்.

அப்படிப்பட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்ற இளம் வயது பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த குற்றங்களால் நம்முடைய நாட்டின் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று சிந்திக்கக் கூடிய நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். படிக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் படிக்க வேண்டும்.

காவல்துறையின் இந்த பேரணி பயனுள்ளதாக இருக்கும். போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற தீய பழக்கவழக்கங்களை தடுப்போம். இதனை விழிப்புணர்வு பேரணி மூலம் அறிவுறுத்துவோம். இது கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒன்று என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்தி, அதன்மூலம் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளான இளம் வயதினரை திருத்த வேண்டும்.

இந்த பழக்க வழக்கத்திற்கு இளைஞர்களை ஆளாக்கும் குற்றவாளிகழை அறவே ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்வாதி சிங், பக்தவச்சலம், மாறன், ராஜேஷ், இன்ஸ்ெபக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய பேரணி வழுதாவூர் சாலை, மூலகுளம், ரெட்டியார்பாளையம், வில்லியனூர் பைபாஸ், ரெட்டியார்பாளையம், இந்திரா காந்தி சதுக்கம், 100 அடி சாலை, கடலூர் சாலை, முருங்கபாக்கம் சந்திப்பு, மரப்பாலம் சந்திப்பு, முதலியார்பேட்டை, உப்பளம் சாலை, கடற்கரை சாலை வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News