புதுச்சேரி

கட்சி கொடியுடன் சொகுசு காரில் வந்து கைவரிசை காட்டிய அமாவாசை திருடர்கள்

Published On 2023-06-02 11:09 GMT   |   Update On 2023-06-02 11:09 GMT
  • கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து அமாவாசை நெருங்கும் நாளில் கொள்ளை அடிப்பது இவர்களுக்கு வாடிக்கையானது.
  • போலீசார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் சொகுசு கார், பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த சந்தை புதுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுராணி (வயது 65). இவர் தனது மகன் நாகராஜ், மருமகள் காவேரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

அழகு ராணி கரிக்கலாம் பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த 17-ந்தேதி சென்றிருந்த நிலையில் அவரது மகன் நாகராஜ் மற்றும் மருமகள் காவேரி வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டின் வாசலில் படுத்திருந்தனர்.

மறுநாள் காலை தூங்கி எழுந்த காவேரி வீட்டின் தோட்டத்திற்கு சென்றபோது பின்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தனது மாமியார் அழகு ராணி தங்கி இருந்த அறை கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து நகை, பத்திரங்கள், பணம் மற்றும் மளிகை பொருட்களை மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோல் மறுநாள் செட்டிப்பட்டு என்னும் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் வீட்டு பின் கதவை உடைத்து சிலிண்டர் மற்றும் சமையல் பாத்திரங்களை கும்பல் திருடியது.

புதுவை-விழுப்புரம் எல்லையில் உள்ள கிராமங்களில் இதுபேல் தொடர் அடிக்கடி திருட்டுஅடிக்கடி நடந்தது. அதுவும் அமாவாசை நாளில் இருட்டை பயன்படுத்தி திருட்டு நடைபெற்றது. பூட்டி இருக்கும் வீட்டின் பின் கதவை மட்டும் உடைத்து ஒரே திருட்டு கும்பல் தொடர்ந்து கைவரிசையை காட்டியது.

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து அமாவாசை நெருங்கும் நாளில் கொள்ளை அடிப்பது இவர்களுக்கு வாடிக்கையானது.

இதனால் தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். அதோடு ரோந்து பணியை கிராமங்களில் அதிகரித்தனர்.

அப்போது மடுகரையில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்களை போலீசார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்முரணாக பேசினார்கள். மேலும் வாகனத்தின் எண்ணை சோதனை செய்த போது நகரப் பகுதியில் திருடு போன மோட்டார் சைக்கிள் என தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக அமாவாசை இருட்டை பயன்படுத்தி அவர்கள் திருடி வந்தது தெரியவந்தது.

மேலும், அவர்கள் சொகுசு காரில் அரசியல் கட்சியின் கொடியை வைத்து கொண்டு கிராமப் புறத்தில் வீடுகளை பகலில் நோட்டமிடுவர். வீட்டை தேர்வு செய்து இரவில் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருடும் பொருட்கள் அனைத்தையும் காருக்குள்ளேயே வைத்திருப்பதும் நகைகளை அடகு வைத்தும் பணத்தை செலவிட்டும் வந்துள்ளனர். இந்த கும்பலில் தலைவராக செயல்பட்டவர் தமிழ்ராஜ் (36). இவர் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். துணிக் கடை என்பது பகுதிநேர தொழிலாகவும் திருட்டை முழுநேர தொழிலாளகவும் செய்துள்ளார்.

இவரது கூட்டாளிகள் விழுப்புரம் விநாயகபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் அய்யனார், சீனிவாசன் ஆகியோரை கைது செய்த போலீசார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் சொகுசு கார், 3 பைக், கியாஸ் அடுப்பு, சிலிண்டர், தோசை கல் மற்றும் சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் தமிழக கிராமங்களில் 10 இடங்களிலும், புதுவையில் 5 இடங்களிலும் கொள்ளை அடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News