புதுச்சேரி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலின் மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு- கமிட்டி புகார்

Published On 2023-07-21 10:53 IST   |   Update On 2023-07-21 10:53:00 IST
  • மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.
  • புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது.

புதுச்சேரி:

புதுவை ரெயின்போ நகரில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மோசடி செய்யப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.

மேலும் அப்போது மாவட்ட பதிவாளராக இருந்த ரமேஷ், நில அளவைத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே வில்லியனூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலையில் புதுவை மணக்குளவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது. அதுபோல் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வானூரிலும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பு மிக்க நிலம் உள்ளது.

தற்போது அந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மனைகளாக பிரித்து பலர் வீடு கட்டியுள்ளனர். எனவே காவல் துறை நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து உடனே அந்த இடத்தை மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News