புதுச்சேரி

பள்ளிகளில் கோடை காலத்தையொட்டி மாணவர்களுக்கு வாட்டர் பெல் அடிக்கப்பட்டது. இதில் மாணவிகள் குடிநீர் பருகும் காட்சி.

அரசு பள்ளிகளில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்

Published On 2023-06-14 09:32 GMT   |   Update On 2023-06-14 09:32 GMT
  • மணி அடித்து தண்ணீர் குடிக்க அறிவுறுத்தல்
  • காலையில் இறை வணக்க கூட்டத்தில் நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படும் விளைவுகளை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பள்ளி திறப்பு 2 முறை நீட்டிக்கப்பட்டது. இன்று கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் மாணவர்களை வரவேற்க விதவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளியின் வாயில்களில் தோரணங்கள் கட்டப்பட்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

வாசலில் கலை நிகழ்ச்சிகள், மேளதாளங்களுடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்களுக்கு சாக்லெட், பூக்கள் வழங்கியும், பன்னீர் தெளித்தும் வரவேற்றனர். முதல் நாளான இன்று மாணவர்களோடு பெற்றோர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர். நீண்ட நாளைக்கு பிறகு நண்பர்களோடு மாணவர்கள் பேசி மகிழ்ந்தனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்தது. இன்று காலை 7 மணி முதலே கடுமையான வெப்பம் நிலவியது.

இதனால் மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த சொல்லும்படி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதற்காக பள்ளிகளில் தினமும் 3 முறை வாட்டர் பெல் அடிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி காலையில் இறை வணக்க கூட்டத்தில் நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படும் விளைவுகளை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மாணவர்கள் தண்ணீர் அருந்த காலை 10.30, 11.45, 2.30 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்பட்டது. அந்நேரத்தில் ஆசிரியர்கள், மாணவர்களை தண்ணீர் குடித்து வரும்படி அறிவுறுத்தினர். பள்ளி திறப்பால் புதுவை நகரத்தில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு கை கடிகாரம் பரிசாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்எல்ஏ, இணை இயக்குனர் சிவகாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News