வில்லியனூரில் திருமணம் நடக்க உள்ள டாக்டர் வீட்டில் நகை கொள்ளை
- திருமணத்திற்காக நகை , பணம் இருந்திருந்தால் அத்தனையும் கொள்ளையர்கள் அபேஸ் செய்திருப்பார்கள்.
- நகை மற்றும் பணத்தை சுதாரிப்போடு வங்கி மற்றும் உறவினர்களிடத்தில் வீரமுத்து வைத்திருந்ததால் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிலிருந்து தப்பியது.
சேதராப்பட்டு:
புதுவை வில்லியனூர் சேர்த்திலால் நகர் பட்டாணிக்களம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து என்ற வீரபுத்திரன் (வயது 59).
இவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் பதிவேட்டு துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் டாக்டர் இளங்கோவன் (25) நாகப்பட்டினத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இளங்கோவனுக்கும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த டாக்டரான இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் முடிந்தது. இவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக கடந்த 27-ம் தேதி வீரமுத்து, அவரது மனைவி குணா, மகள் சபிதா, அவரது தம்பி குப்புசாமி ஆகியோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
நேற்று இரவு வீடு திரும்பி அவர்கள் வீட்டை திறக்கும் போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்தது. திறக்க முடியாமல் தவித்த இவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் வெளியே சிதறி கிடந்தது.
மேலும் வீட்டின் பின்பக்க இரும்பு கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கொள்ளையர்கள் தப்பிச்சென்ற வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது.
டாக்டர் இளங்கோவனுக்கு திருமணம் நடக்க இருந்தது கொள்ளையர்களுக்கு தெரியவந்து அவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பெண் வீட்டார் போட்ட 2 ½ சவரன் தங்கச் செயின் மற்றும் அரைப்பவுன் மோதிரம் மட்டுமே பீரோவில் இருந்தது. அதனை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
திருமணத்திற்காக நகை , பணம் இருந்திருந்தால் அத்தனையும் கொள்ளையர்கள் அபேஸ் செய்திருப்பார்கள். நகை மற்றும் பணத்தை சுதாரிப்போடு வங்கி மற்றும் உறவினர்களிடத்தில் வீரமுத்து வைத்திருந்ததால் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிலிருந்து தப்பியது.
ஏற்கனவே இந்த பகுதியில் பல வீடுகளில் நகை செல்போன்கள் திருட்டுப் போய் உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் மீது போலீசார் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.