ரவுடிகள் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
- மோட்டார் சைக்களில் சென்ற இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
வானூர்:
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். இவர்கள் கடந்த 10-ந்தேதி மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். மோட்டார் சைக்களில் சென்ற இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்
இது தொடர்பாக வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாகவும், பழிக்குப்பழி வாங்கவும் வழுதாவூரைச் சேர்ந்த ரவுடி முகிலன் அருண்குமார், அன்பரசன் ஆகியோரை கொலை செய்திருக்கலாம் என்று தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.
இதில் தனிப்படை போலீசார் முகிலனின் கூட்டாளிகளான புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சென்னை அம்பத்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலவ், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வானூர் போலீசார் முடிவு செய்து இன்று சென்னை கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்னர்.
மேலும், இந்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்துள்ள முக்கிய குற்றவாளியான வழுதாவூர் முகிலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னரே கொலைக்கான காரணங்கள் தெரியவரும் என்று வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் கூறினார்.
மேலும், தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கடலூர் சிறைக்கு அழைத்து வந்தனர். இங்கு கொலை செய்யப்பட்ட அருண்குமாரின் ஆதரவாளர்கள் சிறையில் உள்ளதால், இவர்களை வானூர் போலீசார், விழுப்புரம் சப்-ஜெயிலில் அடைத்தனர் . விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் வேறு மாவட்டங்களில் உள்ள கோர்ட்டில் சரணடைவதும், பின்னர் அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.