புதுச்சேரி

புதுவை அருகே தனியார் நிறுவன அதிகாரி-மகனை தாக்கிய ஓட்டல் ஊழியர்கள்

Published On 2022-08-23 14:00 IST   |   Update On 2022-08-23 14:00:00 IST
  • புதுவை தவளக்குப்பம் அருகே தனியார் நிறுவன அதிகாரி-மகனை தாக்கிய ஓட்டல் ஊழியர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • தாக்குதலில் காயமடைந்த அல்போன்ஸ் மற்றும் அவரது மகன் மேத்யு ஆகியோர் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

புதுச்சேரி:

சென்னை மவுண்ட்ரோடு பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(வயது45). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் புதுவையில் நடந்த நண்பரின் புதுமனை புகுவிழாவுக்கு தனது மகன் மேத்யுவுடன் புதுவை வந்தார்.

பின்னர் தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு அல்போன்ஸ் மகனுடன் சென்றார்.

அங்குள்ள தனியார் பீச் ஓட்டலுக்கு செல்வதற்கு நுழைவு கட்டணம் கேட்டதால் அல்போன்ஸ் 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அதற்கு அங்கிருந்த பெண் ஊழியர் சில்லரையாக கொடுக்கும்படி கூறினார். ஆனால் தன்னிடம் சில்லரை இல்லை என்று அல்போன்ஸ் தெரிவித்தார்.

அப்போது அங்கிருந்த ஓட்டல் காவலாளி நான் வேண்டுமானால் சில்லரை பொறுக்கி எடுத்து வரட்டுமா? என்று கிண்டலாக தெரிவித்தார்.

இதுபற்றி அல்போன்ஸ் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே ஒட்டல் காவலாளி வாக்கி-டாக்கி மூலம் மற்ற ஓட்டல் ஊழியர்களை அழைத்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அல்போன்சையும், அவரது மகன் மேத்யுவையும் கையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கினர்.

மேலும் இருவரையும் உயிருடன் இங்கேயே புதைத்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த அல்போன்ஸ் மற்றும் அவரது மகன் மேத்யு ஆகியோர் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து அல்போன்ஸ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News