புதுச்சேரியில் ஆட்டோ டிரைவர்களுடன் சென்னை சுற்றுலா பயணிகள் மோதல்
- புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- ஆட்டோ டிரைவர்களுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சென்னையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்து பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு கடற்கரைக்கு வந்தனர்.
கடற்கரையை சுற்றிப் பார்த்துவிட்டு குடிபோதையில் வந்த அவர்கள் டி.ஜி.பி. அலுவலகம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த வியாபாரி விற்பனை செய்த சிறிய மேளத்தை இலவசமாக கேட்டனர். வியாபாரி பொருளை தர மறுத்தார். அதனால் இளைஞர்கள் வியாபாரியை தாக்கினர்.
இதை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் வியாபாரியை மீட்டு இளைஞர்களை தட்டிக்கேட்டனர். இதில் ஆட்டோ டிரைவர்களுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இது வைரலாக பரவியது.
இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.