புதுச்சேரி

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது அதிருப்தி: பா. ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷாவை சந்திக்க முடிவு

Published On 2022-09-20 09:34 GMT   |   Update On 2022-09-20 09:34 GMT
  • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணி தர்மத்தை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார்.
  • எந்த விவகாரத்திலும் பா.ஜனதாவை ஆலோசிப்பது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை ஏற்பதில்லை என ஆதங்கப்பட்டனர்.

புதுச்சேரி:

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசு அமைந்து 1½ ஆண்டாகியும், பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு இதுவரை வாரிய தலைவர் பதவிகள் வழங்கவில்லை.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு, ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களுக்கும் வாரிய பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. பா.ஜனதா மேலிட தலைமையில் இருந்தும் வாரிய பதவி வழங்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இதுவரை வாரிய பதவி வழங்காதது பா.ஜனதா எம்.எல்.ஏக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிப்பட்டது. சட்டசபையில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், புதிய மதுபான ஆலைக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்தார். தங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரசின் மீது குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக்கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமார், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணி தர்மத்தை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார். எந்த விவகாரத்திலும் பா.ஜனதாவை ஆலோசிப்பது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை ஏற்பதில்லை என ஆதங்கப்பட்டனர்.

மத்திய அரசு திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதோடு, தங்கள் தொகுதிகளில் கோவில் கமிட்டி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை தங்களிடம் கேட்காமல் பல முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் புகார் கூறினர்.

அமைச்சரவை கூட்டமும் நடத்துவதில்லை, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகூட்டத்தையும் நடத்த முன்வரவில்லை என குற்றம்சாட்டினர். அமைச்சர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தினார். மீண்டும் ஒரு முறை முதல்-அமைச்சரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என கூறினார்.

ஏற்கனவே 2, 3 முறை புகார் கூறியும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தன் நிலைப்பாடை மாற்றிக்கொள்ளவில்லை என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ஆனாலும், புதுவைக்கு வரும் மத்திய மந்திரி எல்.முருகனுடன் மீண்டும் ஒரு முறை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

அதோடு அடுத்த வாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லிக்கு சென்று பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது புதுவை அரசு, அரசியல் குறித்து பேச முடிவெடுத்துள்ளனர்.

Tags:    

Similar News