புதுச்சேரி

புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- அ.தி.மு.க.

Published On 2024-04-03 09:32 GMT   |   Update On 2024-04-03 09:32 GMT
  • தேர்தலில் கண்டெய்னர் மூலம் பா.ஜனதா வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.
  • உலக அளவில் நம் நாடு ஜனநாயக நாடு என பேசப்படுவதற்கே இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய பாகுபாடற்ற செயல்பாடு முதல் காரணமாக இருக்கிறது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக, வெளிப்படையாக, சமநிலையோடு நடக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சராக போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளருக்கு அரசு எந்திரங்கள் முழுமையாக தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக துணை நிற்கின்றன.

அவரது பிரசாரத்தின் போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு பிரசாரத்தின் போதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. ஆனால் இதை தேர்தல் துறை கண்டு கொள்ளவில்லை.

தற்போது வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடப்படுகிறது. இது சம்பந்தமான அரசு துறை ஊழியர்களை தன்வசப்படுத்திக் கொண்டு அவர்களது விலாசப்பட்டியலை பா.ஜனதாவினர் கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் நேரிடையாக வீட்டிற்கே சென்று ரூ.500 பணம் கொடுக்கின்றனர்.

இது சர்வ சாதாரணமாக வெளிப்படையாக நடக்கிறது. இந்த தேர்தலில் கண்டெய்னர் மூலம் பா.ஜனதா வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. அந்த பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் சுமார் ரூ.1000 வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

உலக அளவில் நம் நாடு ஜனநாயக நாடு என பேசப்படுவதற்கே இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய பாகுபாடற்ற செயல்பாடு முதல் காரணமாக இருக்கிறது. ஆனால் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மத்திய ரிசர்வ் காவல் படையினரின் கண்காணிப்பிலும், புதுவை மாநிலத்திற்கு நேர்மையான தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கூடுதலாக நியமனம் செய்து நடைபெற இருக்கும் இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகார பலம், பணம் பலம், மிரட்டல்கள் இவற்றை தடுத்த நிறுத்த வேண்டும்.

புதுவை அரசு நிர்வாகமே ஒருதலைப்பட்சமாக பா.ஜனதா வேட்பாளருக்கு தேர்தல் பணி ஆற்றுவதால் நடைபெற இருக்கும் புதுவை பாராளுமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News