புதுச்சேரி

கொரோனா தொற்று பயத்தால் பூட்டிய வீட்டில் 6 மாதமாக மகனுடன் வசித்த தாய்

Published On 2023-09-08 09:22 IST   |   Update On 2023-09-08 09:22:00 IST
  • தங்களுக்கும், பிராணிகளுக்கும் தேவையான உணவு பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
  • கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண், கடந்த ஆண்டு இதேபோல் மகனுடன் பூட்டிய வீட்டுக்குள் இருந்ததும், அவர்களை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி:

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின் தொற்று பரவல் படிப்படியாக குறைந்தவுடன் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

தற்போது மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். இந்தநிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது 11 வயது மகன் மற்றும் 9 நாய்கள், ஆடு, கோழி, முயல்களுடன் கொரோனா தொற்று பயத்துடன் வீட்டின் உள்பக்கம் தாழ்பாள் போட்டுக்கொண்டு கடந்த 6 மாதம் வீட்டிலேயே இருந்துள்ளார்.

மேலும் அவர்கள் தங்களுக்கும், பிராணிகளுக்கும் தேவையான உணவு பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

இதுபற்றி அக்கம் பக்கத்தினர் புதுவை குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த வீட்டிற்கு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் சென்றனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து அந்த பெண்ணையும், அவரது மகனையும் மீட்டனர். பின்னர் மருத்துவ ஆலோசனை வழங்க தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இந்த பெண், கடந்த ஆண்டு இதேபோல் மகனுடன் பூட்டிய வீட்டுக்குள் இருந்ததும், அவர்களை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News