புதுச்சேரி மாங்குரோவ் காடு பகுதியில் 190 அடி நீளம், 45 அடி அகலத்தில் பிரமாண்டமாக பிரதமர் மோடி பெயர் உருவாக்கம்
- இயற்கை சூழல் வெளிநாட்டவரையும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
- மாங்குரோவ் வேர்களை தோண்டி பல ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் ஆறு மற்றும் கடலும் சந்திக்கும் முகத்துவாரத்தில் மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகள் இயற்கையாக அமைந்துள்ளன.
2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் இருந்து இந்த பகுதியை மாங்குரோவ் காடுகள் காப்பாற்றியது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து முருங்கப்பாக்கம் ஆற்று பகுதியில் கூடுதலாக மாங்குரோவ் காடுகளை வளர்ந்து வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான 216 ஏக்கர் பரப்பளவில் மிக சிறப்பாக வளர்ந்துள்ள இந்த மாங்குரோவ் காடுகள் பறவைகளின் புகலிடமாக இருப்பதுடன் நகர பகுதியில் இருந்து நீர் வழியே வரும் பிளாஸ்டிக் குப்பைகளை கடலுக்குள் செல்லாமல் தடுத்து வருகிறது.
முருங்கம்பாக்கம் ஆற்றில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் நீர்வழிப்பாதையில் எழில் கொஞ்சும் பசுமையான மரங்கள் என இயற்கையாய் இங்கு சுற்றுலா மையம் உருவாகியுள்ளது.
இந்த இயற்கை சூழல் வெளிநாட்டவரையும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
ஆனால் இந்த இயற்கை அரணுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மண்புழு எடுக்கும் கும்பல் ஒரு மாதத்திற்கு 2 ஏக்கர் என மாங்குரோவ் வேர்களை தோண்டி பல ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது.
இவற்றை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.இந்த காடுகளை காக்க போராடி வரும் பியூச்சர் இண்டியா டிரஸ்ட் பொறுப்பாளர் ராஜமனோகர் தலைமையில் 5 பேர் தங்களது கோரிக்கையை நூதன முறையில் வெளிப்படுத்தி உள்ளனர்.
மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்ட இடத்திலேயே மாங்குரோவ் காடுகளை மீட்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்து மிக பிரமாண்ட வகையில் பிரதமர் மோடி பெயர் மற்றும் தேசிய கொடியை அமைத்துள்ளனர்
மாங்குரோவ் காடுகளை மீட்டு அதற்கு பிரதமரின் பிறந்த நாளையொட்டி பிரதமரின் பெயரை வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அதற்காக 190அடி நீளமும் 45 அடி அகலமும் கொண்ட பிரதமரின் பெயரை 5 நபர்கள் இணைந்து 11 நாட்களாக உருவாக்கியுள்ளனர்.