கோப்பு படம்.
இறுதி தேர்வை குறிப்பிட்ட காலத்தில் நடத்தாததால் மாணவர்கள் பாதிப்பு
- அரசு உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த காலக்கெடுவை நடைமுறைப் படுத்த வேண்டும்.
- கல்லூரிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி ஆண்டு தேர்வை நடத்த புதுவை பல்கலைகழகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச் சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 10, 15, ஆண்டுகளாகவே புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டுத் தேர்வுகள் முறையாக குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்படுவதில்லை. அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன.
ஒரு செமஸ்டர் என்பது 5 மாத காலத்திற்கானது. அது பெரும்பாலும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலும் கணக்கெடுக்கப்பட்டு கல்லூரிகள் செயல்பட வேண்டும்.
இந்தக்கால வரையறை எந்தக் கல்லூரிகளிலும் கடைபிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் கல்லூரிகள் திறக்கும் தேதியும், மூடும் தேதியும் முடிவெடுப்பது பல்கலைக்கழகமே.
எனவே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரி அரசு உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த காலக்கெடுவை நடைமுறைப் படுத்த வேண்டும்.
ஆனால் 2022-23-ம் ஆண்டுக்கான இந்தக் கல்வி ஆண்டு மே மாதம் நிறைவடைந்துவிட்ட நிலையில் ஜூன் மாதம் நடத்தப்பட வேண்டிய பல்கலைக்கழக தேர்வுகள் எதுவும் நடைபெற வில்லை. பல கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்கள் இன்னும் தேர்வுக் கட்டணம் கூட செலுத்தாமல் உள்ளனர்.
அதற்கான அறிவிப்பை மிக மிகத் தாமதமாகவே பல்கலைக் கழகம் வெளியிட்டது. காலம் கடந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சில பாடங்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பயிலும் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் பாதிப்படைகின்றனர்.
எனவே கல்லூரிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி ஆண்டு தேர்வை நடத்த புதுவை பல்கலைகழகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.