புதுச்சேரி

மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் முதல் பரிசு வென்ற திருபுவனை வேலழகன் அணிக்கு பா.ஜனதா பொதுச்செயலாளர் ஜி.கே. ராஜன் கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கிய காட்சி.

மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி

Published On 2022-08-16 09:08 GMT   |   Update On 2022-08-16 09:08 GMT
  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான 25-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.
  • மாரியம்மன் கோவில் திடலில் நடந்த கபடி போட்டிக்கு இடையஞ்சாவடி கிராம நாட்டாமைகள் தலைமை தாங்கினர்.

புதுச்சேரி:

75-வது ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி ஆரோ கிரஸன்ட் கபடி கிளப் சார்பில் புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான 25-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.

மாரியம்மன் கோவில் திடலில் நடந்த கபடி போட்டிக்கு இடையஞ்சாவடி கிராம நாட்டாமைகள் தலைமை தாங்கினர். இரும்பை ஊராட்சி மன்ற தலைவர் வசந்திகபாலி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்க விழாவில் ஆரோவில் பவுண்டேஷன் செயலர் ஜெயந்திரவி, கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு மித்ரன், ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தனர்.

மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதிப் போட்டியில். ஆண்கள் பிரிவில் திருபுவனை வேலழகன் அணியினர் முதல் பரிசு வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

2-ம் பரிசை கூடப்பாக்கம் நியூ ஆதம்ஸ் அணியினர் தட்டிச் சென்றனர். பிச்சவீரன்பட் ஒய்.எம்.சி அணியினர் 3-ம் இடத்தையும் அரியாங்குப்பம் ஜெய் பார்ட்னர் அணி 4-ம் இடத்தையும் பெற்றனர். மகளிர் கபடியில் வில்லியனூர் மறவர் அணியினர் முதல் இடத்தைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

அரியூர் தனசேகர் அணி 2-ம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. பரிசளிப்பு விழாவில் புதுவை கபடி சங்க தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், செயலாளர் ஆரியசாமி, பா.ஜனதா விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே ராஜன், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் பரிசினை பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் ஜி.கே ராஜன் வழங்கினார், கவுன்சிலர் ஜெயந்தி ரமேஷ் 2-ம் பரிசையும், அய்யப்பன் 3-வது பரிசையும், பா.ஜனதா மாவட்ட செயலாளர் மூர்த்தி 4-வது பரிசையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இடையஞ்சாவடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், விக்கி சுரேஷ், முத்தமிழ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜேஷ், தமிழ் ஆயிரம் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு சீருடை மற்றும் உணவு வழங்கினர். ஆரோ கிரசன்ட் கபடி கிளப் தலைவர் விஸ்வநாதன் கபடி போட்டியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Tags:    

Similar News