விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள்.
கண்கவர் கொலு பொம்மை கண்காட்சி - விற்பனை
- கண்காட்சியில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- இக்கொலு பொம்மை கண்காட்சியில் உற்பத்தி விலைக்கே உற்பத்தியாளர்கள் நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை பொம்மை உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவு சங்கத்தை அமைத்து பாரம்பரிய பொம்மைகளை உற்பத்தி செய்து ஆண்டு தோறும் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்தி வருகின்றனர்.
நவராத்திரி திருவிழாவையொட்டி புதுவை அரசின் கூட்டுறவு த்துறையின் உதவியுடன் 29-வது கொலு பொம்மை கண்காட்சி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்து வருகிறது. வருகிற 24-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ரூ.50 லட்சத்துக்கு பொம்மைகள் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட கொலு கண்காட்சியில் கொழு கட்டை விநாயகர், நீச்சல் கிருஷ்ணர், மாயா பஜார் கடோத்கஜன், சஞ்சீவி மலை ஆஞ்சநேயர், மாயா பஜார் செட், மாவிளக்கு பூஜை செட், பெண் பார்க்கும் படலம், ராமானுஜர் வேத பாடசாலை, நாச்சியார், கருடர் உற்சவ பெருமாள், ராமானுஜர் குருகுல விஜயம், வளைகாப்பு செட், அசுபதி யாகம் செட், நவ நரசிம்மர், வராகி அஷ்ட லட்சுமி, கும்பகர்ணா, கிளி ஜோசியம், ராமாயணம் ஆகியவை புதிய வரவாக கண்காட்சியில் விற்பனை க்காக வைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான பொம்மைகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளன. இக்கொலு பொம்மை கண்காட்சியில் உற்பத்தி விலைக்கே உற்பத்தியாளர்கள் நேரடியாக விற்பனை செய்கின்றனர். ரூ.50 முதல் ரூ.4 ஆயிரம் வரை பொம்மைகள் உள்ளன.