புதுச்சேரி

கலை நிகழ்ச்சிக்கான உடைகளோடு விழாவில் பங்கேற்று புழுக்கத்தில் தவித்த மாணவர்கள்.

விழா அரங்க ஏசி எந்திரம் பழுதானதால் புழுக்கத்தில் தவித்த பள்ளி மாணவர்கள்

Published On 2023-07-16 12:04 IST   |   Update On 2023-07-16 12:04:00 IST
குளிரூட்டப்பட்ட அரங்கம் என்பதால் வெளியில் இருந்து காற்று உள்ளே வர முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி:

புதுவை அரசின் கல்வித் துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

புதுவை கிழக்கு கடற்கலை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் மாணவர் தினம் நடத்தப்பட்டது.

இந்த அரங்கிற்கு 6 ஏ.சி. எந்திரங்களில் 3 மட்டுமே இயங்கியது. ஏற்கனவே, வெயில் அதிகமாக இருந்ததாலும் அரங்கத்தில் புழுக்கம் அதிகமாகியது. மேடையில் இருந்த கவர்னர், முதல்-அமைச்சர், சபாநாயகர், கல்வி அமைச்சர் ஆகியோர் புழக்கத்தில் அவதிப்பட்டனர்.

அவர்களுக்கு புழுக்கத்தை சமாளிக்க மின்விசிறி வைக்கப்பட்டது. ஆனால் அரங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், கலை நிகழ்ச்சிக்காக அலங்கார உடையுடன் பங்கேற்ற குழந்தைகளும் இருந்தனர்.

குளிரூட்டப்பட்ட அரங்கம் என்பதால் வெளியில் இருந்து காற்று உள்ளே வர முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் விழாவில் பங்கேற்ற அனைவரும் 2 மணி நேரமாக கடுமையான புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.

இதனை பார்த்த முதல்-அமைச்சர் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரியை வரும்படி தனது பாதுகாப்பு அதிகாரி மூலம் அழைத்தார். உடனடியாக அங்கு வந்த பொதுபணிதுறை அதிகாரியிடம் முதல் -அமைச்சர் ரங்கசாமி அரசு விழாவிற்கு முன்னதாக இதெல்லாம் சோதனை செய்ய மாட்டீர்களா..? என கடிந்து கொண்டார்.

புதுவையை பொறுத்தவரை கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழாக்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பாகவே வந்து அரங்கத்தை சோதனை செயவது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News