புதுச்சேரி

நேரு எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட காட்சி.

புதுவை கலெக்டர் அலுவலகத்தை எம்.எல்.ஏ. முற்றுகை

Published On 2023-11-16 08:27 GMT   |   Update On 2023-11-16 08:27 GMT
  • பைக் பேரணியாக சென்றதால் பரபரப்பு
  • மரணமடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் கடந்த 4-ந்தேதி ஏற்பட்ட விபத்தில் 14 பேர் தீக்காயமடைந்தனர்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெடுஞ்செழியன் என்ற தொழிலாளி மரணமடைந்தார். இந்த தொழிற்சாலை வரம்பை மீறி அதிகளவில் உற்பத்தி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மரணமடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிவாரணத்தொகையை குறைந்தபட்சம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

சிகிச்சை பெறுவோரில் எத்தனை பேர் அபாயகட்டத்தில் உள்ளனர்? என தெரிவிக்க வேண்டும். தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். ரூ.பல கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்.

மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். மக்கள் கருத்தறிய குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளுவர் சாலையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திலிருந்து மோட்டார் சைக்கிள்களில் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மனிதநேய மக்கள சேவை இயக்க நிர்வாகிகள், ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர்.

பேரிகார்டு அமைத்து போலீசார் அவர்களை தடுத்தனர். போலீசாருடன் நேரு எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அரசு விழாவுக்கு கலெக்டர் சென்றுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து சப்-கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். அவரின் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. மற்றும் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News