புதுச்சேரி

மதுக்கடை திறக்க எதிப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்

Published On 2023-09-14 15:16 IST   |   Update On 2023-09-14 15:16:00 IST
  • போக்குவரத்து பாதிப்பு
  • வில்லியனூர் போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுச்சேரி:

வில்லியனூர்- பத்துக்கண்ணு செல்லும் சாலையில் உள்ள மூர்த்தி நகரில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி யின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்பு எதிரே தனியார் மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அங்கு மதுபான கடை திறக்க மது பாட்டில்களை வேனில் கொண்டு வந்து இறக்கினர்.

மதுக்கடை இன்னும் ஓரிருநாளில் திறக்கப்படும் என தெரிய வரவே மூர்த்தி நகர் பொதுமக்கள் மற்றும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்குள்ள ரெயில்வே பாதை அருகே நடந்த மறியல் போராட்டத்தால் வில்லியனூரில் இருந்து பத்துக்கண்ணு செல்லும் வாகனங்களும் அதுபோல் பத்துகண்ணிலிருந்து வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் நிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News