கோப்பு படம்.
மின்துறை சொத்துக்களை தனியாருக்கு வழங்கக்கூடாது
- முன்னாள் எம்.பி ராமதாஸ் கண்டனம்
- புதுவை மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பொது சொத்தை தனியாரிடம் கொடுக்க இந்த அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவை அரசு மின் துறையை தனியார் மயமாக்க புதிய டெண்டர் விடுவதற்கு எடுத்துள்ள முடிவு தவறானதாகும். மக்களின் பொதுச்சொத்தை விற்பதற்கு அரசு தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. மின்துறையை தனியார் மயமாக்க மக்களிடம் கருத்து கேட்கவில்லை.
அதற்கான ஒரு விரிவான ஆய்வும் நடத்தப்படவில்லை. மின்துறை ஊழியர்களின் கருத்தைக் கூட கேட்கவில்லை. மின்துறை சம்பந்தமாக ஊழியர்கள் முதல்-அமைச்சரையும் மின்துறை அமைச்சரையும் சந்தித்தபோது மின் துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் தற்போது மத்திய அரசு புதுவை அரசு அனுப்பிய கோப்பை திருப்பி அனுப்பியதில் இருந்து மின் துறையின் 51 சதவீத பங்குகளை தனியாருக்கும், 49 சதவீத பங்கு அரசிடம் இருக்கும் என்றும் மின்துறை சொத்துக்கள் அனைத்தும் தனியாருக்கு வாடகைக்கு விடும் வகையில் அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இது பொதுநலனுக்கு எதிரான முடிவாகும். எந்த சூழ்நிலையிலும் மின்துறையின் சொத்து புதுவை அரசின் சொத்தாகவே இருக்கவேண்டும். புதுவை மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பொது சொத்தை தனியாரிடம் கொடுக்க இந்த அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
இவற்றையும் மீறி அரசு தனியார் மயமாக்க முடிவு செய்தால் இந்த அரசு ஒரு மக்கள் விரோத அரசு என்பதை மக்கள் தெரிந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் தக்க பாடத்தை இந்த அரசுக்கு புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.