புதுச்சேரி

பொங்கல் அங்காடியை எதிர்கட்சி தலைவர் சிவா திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார்.

வில்லியனூரில் பொங்கல் அங்காடி-எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

Published On 2023-01-12 14:55 IST   |   Update On 2023-01-12 14:55:00 IST
  • புதுவை அரசின் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வில்லியனூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தை தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அதற்கு அதிகாரிகள் குழு சிறப்பானதொரு பயிற்சி அளிக்க வேண்டும். மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதை விளம்பரப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை அரசின் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வில்லியனூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தை தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட மகளிர் குழுவினருக்கு சான்றிதழ் வழங்கி ரூ. 92 லட்சத்திற்கான கடன் உதவியும் வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

புதுவையில் முதன் முறையாக அதுவும் கிராமப்புற மக்களின் தேவைகளுக்காக இதுபோன்ற மக்கள் அங்காடிகளை திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கின்ற பொருட்கள் குறைந்த விலையில் தரமானதாக இருக்க வேண்டும்.

அதற்கு அதிகாரிகள் குழு சிறப்பானதொரு பயிற்சி அளிக்க வேண்டும். மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதை விளம்பரப்படுத்த வேண்டும். மார்க்கெட்டில் கிடைக்காத பொருட்களை கண்டுபிடித்து அதனை மகளிர் குழுக்கள் தயாரிக்க வேண்டும்.

அதற்கு வங்கிகள் கடனுதவி அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அரசே நேரிடையாக சந்தைப்படுத்துகின்ற வகையில் பண்டிகைகால சிறப்பு அங்காடி திறக்க வேண்டும்.

இவ்வாறு சிவா பேசினார்.

நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி, வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், கிராம சேவக், சேவக், வட்டார அளவிலான கூட்ட மைப்பின் பொறுப்பா ளர்கள், பணியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பொங்கல் அங்கன்வாடி மற்றும் கிராம சந்தை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை வரை செயல்படும். இதில் மண்பானை வகைகள், பொங்கல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், பலகார மாவு வகைகள், மாட்டுத் தீவனம், வயர் கூடைகள், மரசாமான்கள், கைவினைப் பொருட்கள், மூலிகைச் செடிகள், அசைவப் பொருட்கள் உள்ளிட்ட 100–-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News