புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவை வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை- எதிர்கட்சித்தலைவர் சிவா குற்றச்சாட்டு

Published On 2022-08-22 14:40 IST   |   Update On 2022-08-22 14:40:00 IST
  • புதுவையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை மிக காலதாமதமாக தாக்கல் செய்துள்ளனர்.
  • ரூ.12 ஆயிரம் கோடி இருந்தால்தான் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.பட்ஜெட் குறித்து எதிர்கட்சித்தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-புதுவையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை மிக காலதாமதமாக தாக்கல் செய்துள்ளனர். புதுவையின் பொருளா தாரம் வீழ்ந்து கிடக்கிறது என்பது பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.12 ஆயிரம் கோடி இருந்தால்தான் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

ஆனால் இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ரூ.11 ஆயிரம் கோடிக்கு போட்ட திட்ட மதிப்பீடு, ரூ.10 ஆயிரத்து 696 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நேரடியாக புதுவைக்கு பணம் தரவில்லை. கடன் வாங்க மட்டுமே அனுமதிதரப்பட்டுள்ளது. இந்த கடன் பெற கால அவகாசம் இல்லை. 5 மாதம் வேலை செய்யாமல் முடங்கிவிட்டது. இனி வரும் மழை காலத்திலும் திட்டங்களை செயல்படுத்த முடியாது.

புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. துறைகளுக்கும் நிதிஒதுக்கீடு செய்யவில்லை. முழுமையான ஏமாற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்த்த தொழில்புரட்சி இல்லை. வியாபாரம், தொழில்கள், சுற்றுலா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஆதிதிராவிடர்களுக்கு இலவச குடியிருப்புகள், மனைகள் என எதிர்பார்த்த எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

பூஜ்ய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். சோர்வான நிலையில் முதல்-அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

இது புதுவையின் வளர்ச்சிக்கு பேராபத்தை தந்துள்ளது. எந்த துறையின் கீழ் பெண்களுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கவில்லை. இது புதுவை வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News